தவெகவில் இணைந்த கையோடு புதிய பதவி.. சிங்கை ராமச்சந்திரனுக்கு பெரிய பவர் தரப்போகும் விஜய்!

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்பங்களும் திடீர் நகர்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவின் முக்கிய இளம் முகமாகவும், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகவும் இருந்த சிங்கை ராமச்சந்திரன், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

    Advertisement

    கோவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கி கணிசமான வாக்குகளைப் பெற்ற ஒரு இளம் தலைவர், சட்டென்று தவெகவுக்குத் தாவியது அதிமுக முகாமிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அரசியல் பரபரப்பு ஓய்வதற்குள், தற்போது தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள மற்றொரு தகவல் ஒட்டுமொத்த தமிழக அரசியல் மற்றும் தொழில் துறை வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. அரசின் மிக முக்கியமான நிதி மற்றும் தொழில்துறை ஆலோசனைகளை மேலாண்மை செய்யும் இந்த உயரிய நிர்வாகப் பொறுப்பிற்கு சிங்கை ராமச்சந்திரன் பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே அவர் தவெகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

    ஐஐஎம் அகமதாபாத் நிறுவனத்தின் மேலாண்மைப் பட்டதாரியான சிங்கை ராமச்சந்திரன், ஆரம்பத்திலிருந்தே தொழில்நுட்பம், கார்ப்பரேட் மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவின் ஐடி விங் செயலாளராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, நிர்வாக ரீதியிலான திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் உத்திகளில் தனது திறமையை நிரூபித்தவர்.

    Advertisement

    கார்ப்பரேட் வேலைவாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டவர் என்பதால், தொழில்துறை நிர்வாகத்திற்கும் அரசிற்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்படக்கூடிய தகுதி அவருக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வரும் சூழலில், கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இத்தகைய சூழலில், ஒரு இளம் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் அரசியல் தொலைநோக்கு கொண்டவரை அந்தப் பொறுப்பில் அமர்த்துவது தொழில்துறை சார்ந்த வேகமான முடிவுகளுக்கு உதவும் எனச் சில மூத்த அதிகாரிகள் கருதுவதாகத் தெரிகிறது.

    Advertisement

    இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசுத் தரப்பிலோ அல்லது சிங்கை ராமச்சந்திரன் தரப்பிலோ உறுதி செய்யப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே இத்தகையதொரு நிர்வாகப் பொறுப்பு தொடர்பான தகவல்கள் வெளியாவது, இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்னவென்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே இந்த பொறுப்பிற்கு சில பெரிய தலைகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    சிங்கை ராமச்சந்திரனின் இந்த புதிய அவதாரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா அல்லது இது வழக்கமான அரசியல் ஊகம்தானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ, கொங்கு மண்டலத்தின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவரான சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.

    English Summary

    Big Political Shift: Is Singai Ramachandran Set to Become the New CEO of Guidance Tamil Nadu?