நான் காதலிக்கவே இல்லை.. வஹிதா சொல்வது பொய்.. சென்னை காவல் ஆணையரிடம் முத்துக்குமரன் புகார்

  • சென்னை: 'பிக்பாஸ் தமிழ்' சீசன் 8 வெற்றியாளரான 28 வயது நிரம்பிய முத்துக்குமரன், தன்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டதாக வஹிதா பேகம் என்ற பெண் தற்கொலைக்கு முயற்சிப்பது போல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் முத்துக்குமரன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று வஹிதா பேகத்திற்கு எதிராக பரபரப்பான புகாரளித்துள்ளார்.

    இதுதொடர்பாக முத்துக்குமரன் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ''நானும், வஹிதா பேகமும் நண்பர்களாக மட்டுமே இருந்தோம். எங்களுக்குள் காதல் உறவு ஏதுமில்லை. இயல்பாக, நகைச்சுவையான பேசிய சில வீடியோக்களை அவர் பதிவு செய்து எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோக்களில் இருக்கும் உரையாடல்கள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. தற்போது 2 வீடியோக்களை வஹிதா பேகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் அதில் உள்ள உரையாடல் வாசகங்கள் அவரிடம் காதல் விருப்பத்தை வெளிப்படுத்தி நம்ப வைத்து பின்னர் ஏமாற்றியது போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளது.

    அதுமட்டுமின்றி அவருக்கு மனஉளைச்சலை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அப்படி எதையும் நான் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. வஹிதா பேகம் வெளியிட்ட 2 வீடியோ்களும் எடிட் செய்யப்பட்டவையாகும். அதேபோல் குரல் பதிவுகளும் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    இதனால் அக்டோபர் 8 ம் தேதி வஹிதா பேகத்துடன் தொலைபேசியில் பேசியபோது என் மீது ஏற்பட்ட அதிருப்தியில் அவர் இப்படியான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். நான் ஒருபோதும் அவரை காதலிக்கவில்லை. காதலராக இருக்கவில்லை என்று அவரே கூறியுள்ளார்.

    இருப்பினும் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் எனது முகம், பெயர், குரல் உள்ளது. வீடியோவை பார்ப்போர் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த வீடியோக்கள் உள்ளன. இந்த வீடியோக்கள் பொதுமக்களிடமிருந்து விமர்சனங்களையும், அவதூறு கருத்துகளையும் எனக்கு பெற்று தந்துள்ளது.

    இந்த வீடியோக்கள் எனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி என்னுடைய வீடியோக்களை சமூக ஊடகங்களிடம் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். '' என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Bigg Boss Tamil Season-8 winner Muthukumaran has lodged a complaint with the Chennai Police Commissioner seeking action against Wahidha Begum over social media posts in which she accused him of deceiving her in a romantic relationship. He request to removal of the posts from social media.