பைக் டாக்ஸியில் ஏறிய துணிக்கடை பெண்.. மேகாலயா டூ சென்னை! நடுரோட்டில் அலறிய பெண்! டிரைவர் செய்த பகீர்

  • சென்னை: சென்னையில் பைக் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தும் மற்றும் சாலையில் செல்லும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ஒட்டுமொத்தப் பெருநகரையும் உலுக்கியுள்ளன. இதோ இப்போதுகூட எம்.கே.பி. நகர் அருகே பைக் டாக்ஸியில் சென்ற மேகாலயா மாநிலப் பெண்ணுக்கும் ஓட்டுநர் பாலியல் தொந்தரவு அளித்துள்ள விவகாரம் பெண்களின் பயணப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கு என்னதான் தீர்வு?

    Advertisement

    சமீபத்தில் சென்னை துரைப்பாக்கத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. ஹாஸ்டலில் தங்கி, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 26 வயது இளம்பெண் ஒருவர், அதிகாலையில் தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    Advertisement

    துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு வழியாக நடந்து சென்றபோது, ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணை திட்டமிட்டுப் பின்தொடர்ந்துள்ளார். யாரும் இல்லாத சூழலை பயன்படுத்திக் கொண்டு, அந்த ஐ.டி. ஊழியரிடம் திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியுள்ளார்.

    பைக் டாக்ஸி டிரைவர்கள் பாலியல் தொந்தரவு

    இதனால் நிலைகுலைந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தைரியமாக சத்தமிட்டுக் கூச்சல் போடவும், பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து தனது பைக்கில் தப்பியோடினார். இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியின் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் ஓட்டி வந்த வாகனத்தின் எண்ணை முதன்மை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

    Advertisement

    விசாரணையின் முடிவில், பெருங்குடி ராஜீவ் நகரில் வசித்து வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு (40) என்ற தனியார் பைக் டாக்ஸி ஓட்டுநர்தான் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை எம்.கே.பி. நகர்

    இந்த ஷாக் சம்பவத்தின் வடு மறைவதற்குள், தற்போது சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் அதைவிட ஒரு மோசமான பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை கதிர்வேடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பயணத் தேவைக்காகப் பைக் டாக்ஸி ஒன்றைப் பதிவு செய்து அதில் பயணித்துள்ளார்.

    Advertisement

    டாக்ஸி டிரைவர் தந்த டார்ச்சர்

    அப்போது அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டிய பைக் டாக்ஸி டிரைவரே, வண்டியில் அழைத்து செல்லும்போது அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளையும், அத்துமீறிய சில்மிஷங்களையும் கொடுத்துள்ளார். இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் இன்னலுக்கு ஆளான அந்த மேகாலயா மாநிலப் பெண், தைரியமாக சென்னை எம்.கே.பி. நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான அந்த பைக் டாக்ஸி டிரைவரை தீவிரமாகத் தேடி கொண்டிருக்கிறார்களாம்..

    சம்பந்தப்பட்டவர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றாலும், இத்தகயை சம்பவங்கள் பைக் டாக்ஸிகளில் பெண்களின் பயணப் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்ற அச்சத்தை மக்களிடையே அடிக்கடி ஏற்படுத்தி வருகிறது... அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு என்ன?

    Advertisement

    பைக் டாக்ஸி பாலியல் புகார்கள் - தீர்வு என்ன

    எப்போதுமே, பைக் டாக்ஸிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் டிரைவர்களை பணியில் சேர்க்கும் முன்பே முறையான காவல் துறை குற்றப் பின்னணி சரிபார்ப்பை மேற்கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    பயணங்களின் போது டிரைவர்களின் செயல்பாடுகளையும், வாகனத்தின் பாதையையும் நிறுவனத்தின் கன்ட்ரோல் ரூமுக்கு AI மூலம் நேரலையாக கண்காணிக்க வேண்டும், அத்துடன் பெண்களின் செயலிகளில் இருக்கும் SOS எனப்படும் அவசரகால பொத்தான் நேரடியாகக் காவல் துறையின் அவசர எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.

    Advertisement

    அனைத்துக்கும் மேலாக, பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து, கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அதிவிரைவு நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதே இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...!!!

    English Summary

    Bike Taxi Ride Turns Into a Nightmare for a Garment Shop Employee.. Young Woman Cries Out on a Chennai Road, What Did the Driver Do?