சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்போதுமே எதிர்பாராத மாற்றங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை, சமீபத்திய மாதங்களில் சற்று குறைந்து காணப்படுகிறது.
இதனால், தங்கத்தின் உச்சக்கட்ட விலை உயர்வு முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்வி சாமானிய மக்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால், தங்கச் சந்தையின் முன்னணி உலக முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் தங்கம் இன்னும் பல மடங்கு உயரும் என்றே உறுதியாக நம்புகின்றனர்.
குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற எலக்ட்ரம் குழுமத்தின் தலைவரும், கோடீஸ்வர முதலீட்டாளருமான தாமஸ் கப்லான் தங்கம் குறித்து வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,600 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய மதிப்பில், சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹16,298 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹14,940 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹12,710 ஆகவும் உள்ளது. இந்நிலையில், தாமஸ் கப்லான், எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 30,000 டாலர், 40,000 டாலர் அல்லது 50,000 டாலர் வரை எந்தச் சிரமமும் இன்றி உயரக்கூடும் என்று கூறியுள்ளார். தற்போதைய விலையிலிருந்து இது கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்வாகும். ஒரு அவுன்ஸ் தங்கம் 50,000 டாலரை எட்டினால், இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது. தங்கம் இங்கிருந்து மேலும் 10 மடங்கு உயர்வது என்பது வெறும் வாய்ப்பு மட்டுமல்ல.. அது கட்டாயம் நடக்கும் ஒன்று.. என்று கப்லான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தங்கம் விலை எப்போது இந்த உச்சத்தை எட்டும் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவை கப்லான் குறிப்பிடவில்லை. குறுகிய கால மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை எனக் கூறும் அவர், தற்போதைய விலை குறைவை ஒரு தற்காலிக சரிவாகவே பார்க்கிறார். இதனை விளக்குவதற்காக 1987-ம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையில் நடந்த பிளாக் மண்டேவீழ்ச்சியை அவர் உதாரணமாகக் குறிப்பிடுகிறார். 1987 அக்டோபரில் அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் குறியீடு வெறும் எட்டு வாரங்களில் சுமார் 36% சரிந்தது. அன்று உலகம் முடிந்துவிட்டது போலத் தோன்றிய அந்தச் சரிவு, கடந்த 45 ஆண்டுகால வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் மிகச் சிறிய புள்ளியாகவே தெரியும். அதேபோல், இப்போது தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள லேசான சரிவு என்பது நீண்ட கால உயர்வின் ஒரு பகுதியே தவிர, தங்கத்தின் மவுசு குறைந்துவிட்டது என்பதற்கான அடையாளம் அல்ல என்கிறார் கப்லான். மேலும், இது முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பு என்றும் அவர் கருதுகிறார். தாமஸ் கப்லான் 2007-ல் தனது லியோர் எனர்ஜி நிறுவனத்தை விற்ற பிறகு, தனது குடும்ப முதலீடுகளைத் தங்கம் மற்றும் வெள்ளியில் நிலைநிறுத்தியவர். அப்போது தங்கம் ஒரு அவுன்ஸ் 500 முதல் 600 டாலராக இருந்தபோதே அதன் எதிர்கால வளர்ச்சியை முன்கூட்டியே கணித்தவர். அவரைப் போலவே, 'ரிச் டாட் புவர் டாட்' புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி மற்றும் பிரபல முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் போன்ற பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளியின் நீண்ட கால வளர்ச்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நீண்ட காலத்தில் தங்கம் தன் மதிப்பைத் தக்கவைத்து புதிய உச்சங்களை எட்டும் என்பதே இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.10 மடங்கு உயரும் தங்கம்
விலை சரிவு ஒரு வாய்ப்பு மட்டுமே
உலக வல்லுநர்களின் பார்வை