தாசில்தாரிடம் பிறப்புச் சான்றிதழ் எடுக்க போகணுமா? 21 நாட்களுக்கு பிறகு இப்படியொரு ரூல்ஸ்

  • சென்னை: பிறப்பு, இறப்பு சான்றிதழ் எடுக்கப் போறீங்களா? அப்படியானால் இனிமேல் ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்... பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், எந்த அலுவலகத்தை அணுக வேண்டும் என்பதில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1 முதல், அதாவது இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

    Advertisement

    பொதுவாக குழந்தை பிறந்தாலும், ஒருவர் இறந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு பதிவில் சேர்க்க வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பள்ளியில் சேர்ப்பது, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவது, சொத்து விவரங்கள், வாரிசு சான்றிதழ் போன்ற பல முக்கியமான விஷயங்களுக்கு தேவைப்படுகின்றன. அதனால் இந்த பதிவை தாமதம் செய்யாமல் செய்வது முக்கியம்.

    Advertisement

    பிறப்பு, இறப்பு பதிவு எப்படி?

    பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்தால், வழக்கம்போல சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்திலேயே பதிவு செய்து சான்றிதழைப் பெறலாம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    21 நாட்கள் கடந்த பிறகும் 1 ஆண்டுக்குள் பதிவு செய்யலாம்.. இதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஒரு வருடத்துக்கு மேல் தாமதமானால், மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் போன்ற அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.. இந்த விண்ணப்பங்களையெல்லாம் அதிகாரிகள் முழுமையாக விசாரித்து, பிறப்பு அல்லது இறப்பு தொடர்பான தகவல்கள் சரியானதா என்பதை உறுதி செய்த பிறகே சான்றிதழை வழங்குவார்கள்.

    Advertisement

    புதிய விதி என்ன?

    ஆனால் இனி அப்படியில்லை.. புதிய விதிகளின்படி, 1 ஆண்டுக்கு மேல், 2 ஆண்டுகளுக்குள் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்ய வேண்டும் என்றால், இனி மாவட்ட ஆட்சியர் (DM), வருவாய் கோட்டாட்சியர் (SDM) அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை மாஜிஸ்திரேட் (Executive Magistrate) ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான குறிப்பிட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையானதா என்பதை அதிகாரிகள் முழுமையாக விசாரித்த பிறகே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.

    அதேசமயம், 2 ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாகிவிட்டால், அதிகாரிகளிடம் விண்ணப்பித்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (Judicial Magistrate First Class) நீதிமன்றத்தில் முறையான உத்தரவைப் பெற வேண்டும். அந்த உத்தரவு கிடைத்த பிறகுதான் பிறப்பு அல்லது இறப்பு பதிவை மேற்கொள்ள முடியும்.

    Advertisement

    மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்

    பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை சரியான நேரத்தில் செய்ய மக்களை ஊக்குவிப்பதுடன், போலியான பதிவுகளைத் தடுப்பதற்கும் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஒரு நபரின் சட்டப்பூர்வ அடையாளத்துக்கும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் முக்கியமானவை. எனவே இனிமேல் பிறப்பு அல்லது இறப்பு நடந்தவுடன் தாமதம் செய்யாமல் பதிவு செய்வது பொதுமக்களுக்கு தேவையில்லாத சிரமங்களைத் தவிர்க்க உதவும்.

    English Summary

    Birth Certificate New Rules.. Do You Need to Visit Tahsildar After 21 Days? Effective From Today