சென்னை: தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தங்களது சான்றிதழ்களில் பெயர் சேர்க்கத் தவறிய பொதுமக்கள் பலரும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நோக்கித் தங்களது ஆவணங்களுடன் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பது, வாக்காளர் அடையாள அட்டை பெறுவது, திருமணம் பதிவு செய்வது முதல் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவது வரை என மொத்த தேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் இப்போது கட்டாய ஆவணமாக மாறிவிட்டது.
ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், பல்வேறு குடும்ப சூழல்களாலும் பலரால் உரிய காலத்தில் பெயர் சேர்க்க முடியால் போய்விட்டது. இந்நிலையில்தான், அரசு வழங்கியுள்ள இந்த இறுதி வாய்ப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த சான்ஸை தவறவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு சட்டப்பூர்வ சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் உடனடியாக இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுவாகப் பிறப்பு பதிவு செய்யப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே பெயர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கடந்த 2000ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்களுக்காக இந்தச் சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெயர் சேர்ப்பதற்குத் தேவையான ஆவணங்களாக பெயரிடப்படாத பிறப்புச் சான்றிதழின் நகல், பள்ளி அல்லது கல்லூரிச் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பிற முக்கிய அடையாள ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள் தங்களுக்குரிய 1 முதல் 15 வரையிலான மண்டல அலுவலகங்களை அணுகி எளிதில் இந்தப் பணியை முடிக்க முடியும். அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு, புதிய பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை சீக்கிரமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், பல வருடங்கள் கடந்து பெயர் சேர்க்கும்போது அரசு விதிகளின்படி உரிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இத்தனை நாட்களாக பெயர் சேர்க்காமல் விடுபட்டிருந்த பலரும் இப்போது இந்தச் சிறப்பு முகாம்களையும் அலுவலகங்களையும் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர். அரசு அறிவித்துள்ள இந்த இறுதித் தேதியான செப்டம்பர் 26ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து, தங்களது சான்றிதழ்களைச் சரியாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!!பிறப்புச் சான்றிதழ்
ஆவணங்கள், சான்றுகள் என்னென்ன
கட்டணம் வசூல்?