கோட்டைக்கு கொண்டு வரப்பட்ட கேக்.. “இப்போ வெட்ட வேண்டாம்”.. திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்!


  • சென்னை: வழக்கமாக தமிழக முதலமைச்சர்களின் பிறந்தநாள் என்றாலே தலைமைச் செயலகம் முதல் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம், திருவள்ளூரில் நடந்த ஒரு எதிர்பாராத விபத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    முதல்வரின் பிறந்தநாளுக்காக தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு கேக் வரவைக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தினால் முதல்வர் தரப்பு கேக் வெட்ட வேண்டாம் என சொல்லி கேக்கை திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    மாறிய தலைமைச் செயலக சூழல்

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அன்னதானம், ரத்ததானம், நலத் திட்ட உதவிகள் என அவரது கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்திலும் முதலமைச்சர் கேக் வெட்டி கொண்டாடுவதற்காக மிகச் சிறப்பான முறையில் பிரத்யேக கேக் ஒன்று ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டிருந்தது.

    அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து மழை பொழியத் தயாராக இருந்தனர். ஆனால், திருவள்ளூர் துயரச் செய்தி ஒட்டுமொத்த கோட்டையையும் நிசப்தமாக்கியது.

    திருவள்ளூர் வாயு கசிவு விபத்து

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென 'அம்மோனியா வாயு கசிவு' விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 74-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நச்சு வாயுவை சுவாசித்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

    Advertisement

    துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அடுத்தடுத்து உயர்ந்து 8 ஆக மாறியது. 60க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கேக்கெல்லாம் வேண்டாம்.. திருப்பி அனுப்புங்க

    மக்களின் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த முதல்வர் விஜய், உடனடியாக ஆறுதல் தெரிவித்து, அமைச்சர்களை களத்தில் இறக்கினார். இந்நிலையில், இன்று கோட்டைக்குக் கொண்டு வரப்பட்ட சிறப்பு கேக்கை "இப்போது கேக் வெட்டும் சூழல் இல்லை, உடனடியாக கேக்கை திருப்பி அனுப்புங்கள்" என கறாராகக் கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    அடுத்தடுத்து பறந்த உத்தரவுகள்

    கொண்டாட்டங்களைத் தவிர்த்தது மட்டுமின்றி, நேற்று உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

    Advertisement

    விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட அறிக்கையும், 3 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையும் தாக்கல் செய்ய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். தலைமைச் செயலகத்திற்கு வந்த கேக் வெட்டப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட இந்தச் சம்பவம், கோட்டை வட்டாரத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Chief Minister Vijay's birthday celebration has been cancelled due to an unexpected accident in Tiruvallur. A special cake had been brought to the Secretariat for the occasion; however, reports indicate that the CM's team decided against the cake-cutting ceremony and sent the cake back following the ammonia gas leak incident in Tiruvallur.