717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக!

  • சென்னை: தவெக அரசால் "மூடப்பட்டதாக" அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் பற்றிய ஆர்.டி.ஐ கேள்விக்கு கோப்பு நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,765 சில்லறை கடைகள் வாயிலாக, மது பானங்களை விற்கிறது. பொதுமக்கள் நலன் கருதி, கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட, கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதற்கு ஏற்ப, அந்த கடைகளும் சமீபத்தில் மூடப்பட்டன.

    Advertisement

    இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை பற்றிய தகவலை வழங்கவும், மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை கேட்டு, டாஸ்மாக் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ஒருவர் அதற்கு ஜூன் 5 ஆம் தேதி அனுப்பிய பதிலில், 'கோப்பு நிலுவையில் உள்ளது; எனவே, தகவல் வழங்க இயலாது' என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக அரசால் "மூடப்பட்டதாக" அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பலவும் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழும் நிலையில், டாஸ்மாக் கடைகள் தொடர்பான கோப்பு நிலுவையில் உள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டியலை வெளியிடாமல் சப்பைக் கட்டுக் கட்டியுள்ளது மாற்று சக்தி அரசு!

    Advertisement

    ஆனால் ஊனால் ஆய்வு என்று குதிப்பது, முறுக்கு பாக்கெட்டின் உற்பத்தி தேதிக்கு ஆதாரம் கேட்பது என "விஞ்ஞான" ரீதியாக ஆட்சி செய்யும் தவெக ஆட்சியாளர்கள், டாஸ்மாக் கடைகள் மூடல் விஷயத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன்? மடியில் கனமில்லை எனில் பயமேன்? தூய சக்தி என முழங்கிவிட்டு, உண்மையை வெளியிடத் தயங்கலாமா?

    எனவே, மேன்மேலும் காலந்தாழ்த்துவதை விடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை முகவரியுடன் தெளிவாக பட்டியலிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதல்வர் விஜய்யை மீண்டும் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    In response to an RTI query regarding the 717 TASMAC shops announced as "closed" by the government, the reply stated that the file is currently pending. Against this backdrop, Tamil Nadu BJP President Nainar Nagendran has urged the state government to release a white paper on the matter.