உங்க அரசியலுக்கு எங்கள் தெய்வங்களை கேலி செய்வதா? விஜய், உதயநிதிக்கு எதிராக வரிந்து கட்டிய பாஜக

  • சென்னை: தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், ஓம் சக்தி.. பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என்று விமர்சித்த நிலையில், இதற்கு பதிலடியாக ஓம் காளி, ஜெய்காளி.. தவெக ஒரு ஓடுகாலி என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தலைவர்களின் இந்த பேச்சை இந்து மத தெய்வங்களின் மந்திரத்தை கேலி செய்வதாக உள்ளது என்று இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

    Advertisement

    தமிழத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியாக உள்ள தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இதனால் தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.

    Advertisement

    விஜய் - உதயநிதி ஸ்டாலின்

    இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தவெகவுக்கும் திமுகவும் இடையே பிரசார களத்தில் கடும் கருத்து யுத்தம் நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவை சட்டமன்ற தேர்தலின் போது விமர்சித்தது போல ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்திலும் விஜய் விமர்சனம் செய்தார்.

    பாஜக கடும் விமர்சனம்

    விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு பதிலடியாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தவெகவை ஓம் காளி, ஜெய்காளி.. தவெக ஒரு ஓடுகாலி என்று விமர்சித்து இருந்தார். இந்து கடவுகள்களின் மந்திரத்தை வைத்து அரசியல் தலைவர்கள் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில், பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து இரு கட்சிகளையும் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக எக்ஸ் பக்கத்தில் 1.13 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

    Advertisement

    எங்கள் தெய்வங்களை அரசியல் விமர்சனங்களுக்கும் நகைச்சுவைக்கும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான இத்தகைய செயல்களுக்கு எங்களது கடும் கண்டனங்கள்! என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட அந்த வீடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது: -

    இந்து தெய்வங்கள்

    தமிழக அரசியல் களத்தில் அண்மை காலத்தில் இந்து தெய்வங்களை அரசியல் நகைச்சுவைக்காக பயன்படுத்துவது என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஒருபக்கம் சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஓம் காளி, ஜெய் காளி தவெக ஒரு ஓடுகாலி என்று" கூறி காளி தெய்வத்தை போற்றும் மந்திரத்தை தவெகவை தாக்கும் சொல்லாக மாற்றியிருக்கிறார். மறுபக்கம் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், "ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி" என்று மக்கள் அனுதினம் பயன்படுத்தும் அம்மன் மந்திரத்தை திமுகவை வசைபாடும் சொல்லாக மாற்றியிருக்கிறார்.

    Advertisement

    நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

    ஜோசப் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் பைபிள் வசனங்கள் சொல்வதும் சர்ஜ்ஜில் பாடுவதும் என இருக்கிறார்கள். ஒருவேளை யாராவது பைபிள் வசனங்களை கேலி செய்து இப்படி பேசினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? உங்களது தொண்டர்கள் ஏற்பார்களா? ஏற்க மாட்டார்கள் என்றால் எங்கள் தெய்வங்கள் கேலிப்பொருளாவதை நாங்கள் மட்டும் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும். திமுகவாக இருந்தாலும் சரி, தவெகவாக இருந்தாலும் சரி.. தெய்வங்களை அரசியலுக்குள் இழுப்பதை நிறுத்த வேண்டும்" என்று தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் வீடியோவில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளது.

    English Summary

    BJP: During the election campaign, TVK leader Vijay criticized the DMK by invoking the names of Hindu goddesses—"Om Shakti, Para Shakti"—and labeling the DMK an "evil force" (*theeya sakthi*). In a sharp retort, Udhayanidhi Stalin countered with "Om Kali, Jai Kali," calling the TVK a "deserter" or "turncoat" (*odukaali*). The BJP has now taken up the issue, alleging that these remarks by the leaders mock the mantras associated with Hindu deities.