சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு தமிழக அரசியலில் கட்சி தாவல்கள், கூட்டணி மாற்றங்கள், ராஜினாமாக்கள் என தினந்தோறும் பரபரப்புகள் அரங்கேறி வரும் சூழலில், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அதைவிட முக்கியமாக, அவரைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட அரசியலில் நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தி வந்தவர் விஜயதாரணி. விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்பட்டார்.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், ஒருகாலத்தில் தமிழக காங்கிரஸின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டார். ஆனால், கட்சிக்குள் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியால் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அபோது அவரது முடிவு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் அமைப்புக்கு அது ஒரு பின்னடைவாகவே கருதப்பட்டது. எனினும் பாஜகவில் இணைந்த பிறகு விஜயதாரணியின் அரசியல் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியில் இணைந்ததற்கு பிறகு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாதது மட்டுமின்றி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பதவிகளில் கூட அவருக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி நீண்ட நாட்களாக இருந்தது. இதற்கிடையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி தோல்வியை சந்தித்தார். காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பிரவீன் வெற்றி பெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மைக்கேல் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம், பாரம்பரிய காங்கிரஸ் வாக்காளர்கள் மீண்டும் கை சின்னத்தை நோக்கி திரும்பியதுடன், மாற்று அரசியலை எதிர்பார்த்த இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றதாக தேர்தல் பிந்தைய ஆய்வுகள் கூறின. இதனால் பாஜகவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் விஜயதாரணி பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், விஜயதாரணி தவெக-வில் இணைந்த பிறகு, பாஜகவில் அதிருப்தியில் உள்ள சில நிர்வாகிகளும் புதிய அரசியல் வாய்ப்புகளை தேடி வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சியில் இருப்பதா, பல்வேறு கட்சிகளில் இருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் தவெக பக்கம் நகரும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சில பிரபலங்கள் தமிழக வெற்றிக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் பாஜகவில் இருந்து அண்ணாமலை கட்சிக்கு செல்ல விரும்பாத சில நிர்வாகிகள் செங்கோட்டையன் மூலம் பேச்சுவார்த்தையை துவக்கி இருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் விஜய் உடன் நடித்த 'இரண்டு நடிகைகள்' தமிழக வெற்றிக்கழக தரப்புக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு, அறிவுசார் பிரிவு ஆகிய முக்கிய பிரிவுகளின் இரண்டு தலைவர்களும் தற்போது ஆதவ் அர்ஜுனாவிடம் பேசி வருவதாக சொல்கின்றனர்.விஜயதாரணி
விளவங்கோடு தொகுதி
பாஜக
பாஜக பிரபலங்கள்
இரண்டு நடிகைகள்