'கடல்லையே இல்லையாம்'.. ராணிப்பேட்டையில் ஜேகே டயர்ஸை கண்டுபிடித்தால் தக்க சன்மானம்.. பாஜக கிண்டல்

  • சென்னை: பாஜக மாநில தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் "தவெக MLA திருமதி. தாஹிரா அவர்கள் குறிப்பிட்ட "JK tyres" என்ற தொழிற்சாலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..!" என்று கூறியுள்ளது. ஜாமீன் கடல்லையே இல்லையாம் என்ற வடிவேலு மீம்ஸை அப்படியே போடடுள்ளது பாஜக.

    Advertisement

    ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, நேற்று சட்டசபையில் பேசும்போது, "இங்கு ஜே.கே. டயர் கம்பெனி (டயர் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடை) இருக்கிறது. இவர்கள் இரவெல்லாம் டயர்களை எரிய விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களும் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆட்சியிலிருந்தே வைத்து வருகிறார்கள். கண்டிப்பாக நமது ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும். அந்த கம்பெனி நமக்குத் தேவையில்லை. அங்கிருக்கும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என த.வெ.க. எம்.எல்.ஏ. தாஹிரா பேசும்போது கூறினார்.

    Advertisement

    இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், "மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா அவர்களே, அந்தத் தகவல்களை எல்லாம் கொடுங்கள். இன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்யச் சொல்கிறேன். உங்களுக்கு அறிக்கையை தருகிறேன்" என்றார்.

    தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்; எல்லா கம்பெனிகளும் இயங்க வேண்டும். அதேநேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து, நிறுவனங்களுக்கான சட்டத் திருத்தங்களை வழங்கி, அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும்; அதேநேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்" என்றார்.

    Advertisement

    இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த பா.ஜ.க. மாநில தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "ராணிப்பேட்டையில் JK Tyre நிறுவனத்திற்கு ஆலையே இல்லை! இல்லாத கம்பெனியை எப்படி இழுத்து மூடுவது? மேலும், இதில் அதிர்ச்சி என்னவெனில், இரு அமைச்சர்கள் இந்த சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதில் சொன்னதுதான். இன்னும் என்னவெல்லாம் காணப் போகிறோமோ? இறைவா!" என்று கிண்டல் செய்திருந்தார்.

    திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, முதலில் ஜேகே டயர்ஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என்று பேசியதை கடுமையாக கண்டித்தார். இறுதியாக அப்படி ஒரு ஆலையே அங்கு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெளியிட்ட பதிவில், "த.வெ.க எம்.எல்.ஏ மூடச் சொன்ன ஜே.கே. டயர் நிறுவனத்தைப் பற்றி நான் ஒரு சிறிய தேடல் செய்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்று இருப்பது எனக்குத் தெரியாது. அதனால் ஜே.கே. டயருக்குத் தயாரித்து வழங்கும் பெரிய துணை நிறுவனங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தோம், ஆனால் மாசை ஏற்படுத்தும் பெரிய நிறுவனம் எதுவும் எங்களுக்குச் சிக்கவில்லை.

    Advertisement

    பிறகுதான் ராணிப்பேட்டை அருகே உள்ள அந்த 'ஜே.கே. டயர் நிறுவனம்' பற்றி எனக்கு ஏன் தெரியவில்லை என்பதற்கான காரணம் புரிந்தது.

    ஏனென்றால்... அந்த த.வெ.க எம்.எல்.ஏ, டயர் ரீட்ரேடிங் செய்யும் ஒரு சிறிய சில்லறை கடையைத்தான் 'ஜே.கே. டயர் நிறுவனம்' என்று குறிப்பிட்டுள்ளார் . இப்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது; த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் கூறுவதை அவர்களின் ரீல்ஸ்களைப் போல உண்மை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், அவர்களின் சொந்த அரசே அதை ஒப்புக்கொண்டு நியாயப்படுத்தியதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

    உள்ளூர் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்வதற்குப் பதிலாக, ஒரு சில்லறை ரீட்ரேடிங் கடையை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் அளவுக்கு மாசை ஏற்படுத்தும் பெரிய தொழிற்சாலையாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் துரத்தும் 'தொழில்துறை' இதுதானா! அப்படி இல்லை என்று நம்புகிறேன்." இவ்வாறு கிண்டல் செய்திருந்தார்.

    Advertisement

    இதனிடையே பாஜக மாநில தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் "தவெக MLA திருமதி. தாஹிரா அவர்கள் குறிப்பிட்ட "JK tyres" என்ற தொழிற்சாலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..!" என்று கூறியுள்ளது. ஜாமீன் கடல்லையே இல்லையாம் என்ற வடிவேலு மீம்ஸை அப்படியே போடடுள்ளது பாஜக.

    English Summary

    MLA Thahira demanded the closure of a JK Tyres manufacturing plant in Ranipet district However, the BJP has quipped that there will be a handsome reward for anyone who finds JK Tyres in Ranipet.