சென்னை: "ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டு தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்ததற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்?" என முதல்வர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சனிக்கிழமையன்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன.
நெதர்லாந்தில் லெய்டன் செப்பேடுகள் என்றும், இந்தியாவில் ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அறியப்படும் இந்தப் பழங்கால செப்பேடுகளை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு 2012-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள இந்த செப்பேடுகள், சோழப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச முத்திரையைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வெண்கல வளையத்தால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள் இந்தியா கொண்டுவரப்படும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இதனை வரவேற்றுள்ளனர். எனினும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இதனை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து 36 மணி நேரமாக வாய்திறக்காதது ஏன் முதல்வர் விஜய் அவர்களே? மாபெரும் தமிழ் பேரரசை படைத்த சோழர்களில் சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து நமது பாரதப் பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்தற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்? ஒருபுறம், தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகளை நீங்கள் வரவேற்கத் தயாராகாத நிலையில், மறுபுறம் தங்களது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருகின்றனர். இதுதான் தவெக அரசு தமிழக வரலாற்றைப் போற்றும் முறையா? மொத்தத்தில், தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா? அல்லது, தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா? பதிலளியுங்கள் முதல்வரே!"
எனத் தெரிவித்துள்ளார்.