“போக்குவரத்து அமைச்சர் பார்த்திபனை காணவில்லை.. தகவல் தெரிஞ்சா சொல்லுங்க”.. பாஜக கிண்டல்!

  • சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கண்டுகொள்ளவே இல்லை. இதனைச் சுட்டிக்காட்டி, அமைச்சரை காணவில்லை என விமர்சித்துள்ளது தமிழக பாஜக.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், போதிய பேருந்துகள் கிடைக்காமல் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    Advertisement

    வெள்ளிக்கிழமை இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் பலரும் முன்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    முன்பதிவு செய்த பயணிகளின் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறிய, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மாற்று பேருந்துகளையும் இயக்காமல் அலைக்கழித்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசு பேருந்துகள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. சுமார் ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

    Advertisement

    அவ்வளவு மக்கள் ஆம்னி பேருந்துகளை நம்பியுள்ள நிலையில், பண்டிகை காலங்களில் கட்டணம் பல மடங்கு உயர்வது தொடர்கதையாகி உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு பேருந்தில் இடம் கிடைக்காததால் வேறு வழியின்றி ஆம்னி பேருந்தை நாடும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பண்டிகை காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், பேருந்து நிலையங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரடியாக களத்தில் ஆய்வு செய்யவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், கடந்த முறை கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்தபோது அவரது நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்த முறை அவர் ஆய்வு செய்யக்கூட வரவில்லை என பயணிகள் விமர்சித்தனர்.

    தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில், "கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்களின் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறை அமைச்சரைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், Comment Section-இல் சொல்லுங்கள் மக்களே!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பதிவில் நெட்டிசன்கள் பலரும், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    While people struggled due to a lack of sufficient buses from Kilambakkam to their hometowns, Transport Minister Vijay Tamilan Parthiban remained completely indifferent. Pointing this out, the Tamil Nadu BJP has criticized the situation, stating that the Minister is nowhere to be found.