சென்னை: கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு போலி பதிப்பகங்கள் மூலம் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழலையே பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், கடந்த ஐந்து ஆண்டுக்கால தீயசக்தி ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்ல, எதிர்கால மாணவர்கள் இளைஞர்களின் மூளைக்குள் போலி வரலாற்றை உருவாக்கும் விஷங்களை தூவி இருக்கிறார்கள் என்றும் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் சூர்யா சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் சூர்யா கூறியுள்ளதாவது: தி.மு.க-வை தீய சக்தி என தமிழ்நாடு அழைக்க ஆரம்பித்து சுமார் 55 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இந்த நிமிடம் வரையில் தீய சக்தி என்ற வார்த்தைக்கான முழு செயல் வடிவ சக்தியாக தி.மு.க தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது.
அதற்கான சமீபத்திய உதாரணம் கோவை பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கட்டப்பட்ட நூலகம் உட்பட, பல நூலகங்களில் புத்தக கொள்முதலில் கடந்த தி.மு.க அரசு நடத்திய போலி புத்தகக் கொள்முதல் தாண்டவம். எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை படிக்கப் படிக்க... இதுவரை உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நடக்காத ஒரு விபரீத ஊழல், மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தி.மு.க-வால் செய்யப்பட்ட அறிவு துரோகம், கரன்சி ஊழல்களை விட மிக மோசமான கருத்து ஊழல் பற்றி அறிந்து தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது. கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு... வாயை திறந்தால் கொள்கை, கோட்பாடு, திராவிடம், அறிவு, சமூக நீதி என்றெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் நீட்டி முழக்கினார்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என சினிமா கவர்ச்சிகளை வைத்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை அறிவுத்தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு போலி கருத்துருவாக்க பால்வீதி மண்டலத்தையே உருவாக்கினார்கள். ஆனால் திரு.பெருமாள் முருகன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை படித்து முடித்த போது, தி.மு.க-வின் உண்மை முகம் கிழிந்து தொங்குகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் தான் 2011 முதல் இல்லாத நூலக ஆணைக் குழுவை தனது தலைமையில் உருவாக்குவதாக பெருமிதத்தோடு அறிவித்தார். இப்போது புழல் சிறையில் இருக்கிற அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பற்றாக்குறைக்கு சென்னை மாநகர நூலக ஆணைக்குழு என்ற குழுவையும் கருத்தாக பேசாமல் கத்திப் பேசும் மனுஷியபுத்திரன் உள்ளிட்டோரை கொண்டு அமைத்தார். இந்தக் குழுவில் இருந்த கிட்டத்தட்ட அனைவருமே தி.மு.க-வின் ஊது குழல்கள், தி.மு.க-வால் வாங்கப்பட்ட வாய்கள். 2021 முதல் 26 வரை ஒவ்வொரு பிரச்சனையிலும் இந்த ஊது குழல்களும், வாங்கப்பட்ட வாய்களும் தி.மு.க-வை ஏதோ அறிவுலகத்தின் தாய் போல திட்டமிட்டு சித்தரித்து வந்தனர். மேலும் கடந்த ஆட்சியில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் புதிய நூலகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்கிற தேர்வு குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த ஜெயரஞ்சன் தான் ஒன்றிய அரசு என்றும், திராவிட மாடல் என்றும் மூச்சுக்கு மூச்சு ஸ்டாலின் அரசுக்கு ஆதரவாகவும்... பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியவர். இவர் இடம்பெற்று இருந்த நூல்கள் தேர்வு குழு மூலமாகத்தான் இப்போது கோவை பெரியார் அறிவுலகத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிற... அகல் விளக்கு, உதய சூரியன், பீனிக்ஸ் என்ற போலி பதிப்பகங்கள் மூலமாக விஷப் புழுக்களான போலி எழுத்தாளர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த லட்சணத்தில் மோடி இந்தியாவின் வரலாற்றை திரித்து எழுதுகிறார் என்றெல்லாம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் முதல்வராகவே ஐந்தாண்டுகள் இருந்த ஸ்டாலின் கிளிப்பிள்ளை போல பேசினார். பாரதியார் எழுதிய கதை என்று கதை விட்டாரா மோடி? நாலடியார் என்ற நூலைப் பற்றி எழுதாமல் நாலடியார் என்று ஒரு தமிழறிஞர் இருந்ததாக எங்கேயாவது புருடா விட்டாரா மோடி? உலகெங்கும் சென்று உயரமான மேடைகளில் தமிழை மேலும் உயரமாக தூக்கிப்பிடித்தவர் அல்லவா பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இந்த கடைந்தெடுத்த விஷ போலிகள் செயற்கை நுண்ணறிவு மூலமாக விபரீதமான நூல்களை உருவாக்கி, ஒவ்வொரு நூலும் ஆயிரம் ரூபாய், ஆயிரத்து 500 ரூபாய் என மிக அதிக விலை வைக்கப்பட்டு விஞ்ஞான ஊழலை துல்லியமாக செய்துள்ளனர். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழலையே பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுக்கால தீயசக்தி ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்ல, எதிர்கால மாணவர்கள் இளைஞர்களின் மூளைக்குள் போலி வரலாற்றை உருவாக்கும் விஷங்களை தூவி இருக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதி, இட ஒதுக்கீடு, கல்வி என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டிய தி.மு.க ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவு துரோகம் இழைத்துள்ளது. ஊழல் புகாரில் சிறையில் இருக்கும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது இந்த போலி புத்தக ஊழலுக்கும் சேர்த்து வழக்கு போடப்பட வேண்டும். அன்பில் மகேஷ் மட்டுமல்ல அவரோடு இந்த போலி புத்தக ஊழல் கூத்தை நடத்திய அனைவரையும்... முன்னாள் முதலமைச்சர் M. K. Stalin உள்ளிட்ட அனைவரையும் விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்பது மகாகவி பாரதியாரின் தீர்க்கமான வார்த்தைகள். 'படிக்க வைத்தவன்' என்று சொல்லிக்கொண்டே தீய சக்தி தி.மு.க செய்திருக்கிற இந்த மகா பாவத்துக்கு... ஐயோ ஐயோ ஐயோ என்று அவர்கள் போக வேண்டும். அறிவு முகங்கள் என தங்களை வெளிச்சப்படுத்திக் கொண்ட அந்த இழி பிறவிகளுக்கு சட்டமும், சனாதன தர்மமும் நிச்சயம் தண்டனை தரும் என்று தெரிவித்துள்ளார்.திமுக செய்த துரோகம்
கிழிந்து தொங்கும் உண்மை முகம்
போலி புத்தகங்கள்
கோவை 'பெரியார் அறிவுலகம்' ஊழலை செய்தது யார்.. திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? பாஜக சரமாரி கேள்வி
விஞ்ஞான ஊழல்
அறிவு துரோகம்
ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே! வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
ஐயோ என்று போவான்