“மதிப்பெண் பட்டியலில் கலர் குறியீடு? அரசு வேலையை விலை பேசுகிறதா விஜய் அரசு?” வானதி சீனிவாசன் கேள்வி

  • சென்னை: "அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் தகுதித் தேர்வில் சிலரின் மதிப்பெண்கள் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மாபெரும் முறைகேடுகளுக்கான அறிகுறிகளாக தெரிகின்றன. வண்ணக் குறியீடு மூலம் அரசு வேலையை விலை பேசுகிறதா ஜோசப் விஜய் அரசு?" என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,708 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 48 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வை 42,064 பேர் எழுதினர். இந்நிலையில், டிஆர்பி வெளியிட்ட முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தேர்வர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    விரிவாக விடையளிக்கும் இரண்டாம் தாளில் ஏராளமான தேர்வர்களுக்கு மிக குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பலருக்கும், இரண்டாம் தாளில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

    மேலும், சில தேர்வர்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம், சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தேர்வர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இது குறித்து வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிலவும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு நடத்திய தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், சிலரின் மதிப்பெண்களில் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தில் குறியீடுகள் உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

    அதாவது, முதல் தாளில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் 0 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன, முதற்கட்ட தேர்வு முடிவுகள் படி 0 மதிப்பெண்கள் பெற்றவருக்கு பின்பு 15 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது, தற்போது குறிப்பிட்ட சிலரின் மதிப்பெண்கள் மட்டும் வேறு நிறங்களில் "நோட்" செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இவையெல்லாம் தற்செயலானவையாகத் தெரியவில்லை. மாபெரும் முறைகேடுகளுக்கான அறிகுறிகளாகவே தெரிகின்றன. அதிலும் குறிப்பாக மக்களின் உழைப்பைச் சுரண்டுவதில் பெயர்போன காங்கிரஸ் கட்சியினரின் கைவசம் உள்ள இத்துறையில், இத்தனை குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதை நாம் எளிதாக கடந்துவிட முடியாது.

    எனவே, ஊழலுக்கு எதிரானவர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் குழப்பங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமளிக்க வேண்டும். அரசு வேலையை நம்பி காத்திருக்கும் தகுதியுள்ள பட்டதாரிகளின் கனவுகள் நனவாவதை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “The fact that the marks of certain candidates in the qualifying examination for assistant professors in government colleges are marked in blue and yellow appears to be a sign of massive irregularities. Is the ‘Joseph Vijay government’ auctioning off government jobs using color codes?” questioned Vanathi Srinivasan, BJP National Women's Wing President and former MLA.