சென்னை: தேசியக் கொடிக்கு இணையான அந்தஸ்துடன் தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கோரிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர் அடையாளத்தை நிலைநாட்டத் தனிக்கொடி தேவையில்லை என்றும், இதுபோன்ற பேச்சுகள் தமிழ் மற்றும் இந்திய அடையாளங்களை எதிரெதிராக நிறுத்தி பிரிவினை மனப்பான்மையை வளர்க்கும் என்றும் பாஜக தலைவர் வினோஜ் பி. செல்வம் விமர்சித்துள்ளார்.
நேற்று நவம்பர் 1ம் தேதி தவெக அரசு சார்பில் தமிழ்நாடு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன்படி சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், அதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது சில முக்கிய கருத்துகளை குறிப்பிட்டார்.
அதாவதகு தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இது குறித்துப் பேசிய அவர், "பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கென தனிக்கொடியை கொண்டிருக்கின்றன. அதுபோல தமிழ்நாட்டுக்கும் ஒரு கொடி தேவை. அதேபோல தமிழையும் தமிழ்நாட்டையும் முதன்மைப்படுத்தி நமக்கான மாநில கொடியை நாம் உருவாக்க வேண்டும். அந்த கொடியை நம்முடைய முதலமைச்சர் ஏற்றி வைக்க வேண்டும்.. ஒவ்வொரு வீடுகளிலும் அந்த கொடியை நாம் ஏற்ற வேண்டும். தேசிய கொடிக்கு இணையாக தமிழ் மொழியின் பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை உருவாக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் இன்று நாம் நிற்கிறோம்" என்று அவர் பேசியிருந்தார். அதேபோல பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகனும் கிட்டத்தட்ட இதே கருத்தை தான் குறிப்பிட்டிருந்தார். இப்போது இந்த பேச்சுகளே விவாதமாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பாஜகவின் வினோஜ் பி. செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்த தனிக்கொடி தேவையில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், "எங்கள் மொழி உங்கள் கொடிக்காக காத்திருக்கவில்லை. எங்கள் நாகரிகத்துக்கு உங்கள் சான்றிதழ் தேவையில்லை. இந்திய மூவர்ண கொடியின் கீழ் இருப்பதால் நமது தமிழர் அடையாளம் சிறிதும் குறைந்துவிடாது. இதுபோல பேசுவது ஒரு பிரிவினைவாத மனநிலையை வளர்க்கும் அபாயம் உள்ளது. தமிழ் மற்றும் இந்திய அடையாளங்களை விசுவாசமாகவே மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இரண்டிலும் நமக்கு பெருமை தான். அப்படியிருக்கும்போது ஒரு பிரிவை ஏன் உருவாக்க வேண்டும்? உங்களுக்கு தமிழ் மீது உண்மையாகவே அக்கறை உள்ளது என்றால் சீராக இருங்கள். கோயில்களில் தமிழை வலியுறுத்துகிறீர்கள். தேவாலயங்களிலும் மசூதிகளிலும் இதை கேட்பீர்களா? அல்லது கட்டாய தமிழ் என்பது கோயில்களுக்கு மட்டும் தானா? தமிழ் மீது பற்றா? இந்து கோயில்களில் மட்டும் அதிகாரம் செலுத்தும் அரசியலா? உங்கள் கொள்கையை ஒரே மாதிரி வைத்துக் கொள்ளுங்கள்.. அதன் பிறகு தமிழ் கொடி உருவாக்குவது பற்றி பேசலாம். தமிழ்வழி மாணவர்களுக்கான உங்கள் திட்டங்கள் என்ன.. இளைஞர்களுக்கான வேலைகள், தமிழ் ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் என்ன.. முதலில் அதை விளக்குங்கள்.. உங்கள் டார்கெட்களை கொடுங்கள்.. அதற்கான காலக்கெடுவை கொடுங்கள். கொடியை வடிவமைப்பது எளிது. ஆனால், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தேவையானதை முதலில் கொடுங்கள். தமிழர்களின் வாழ்க்கையை உயர்த்துங்கள். அவர்களின் அடையாளத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். தமிழனாக இருப்பது இந்தியனாக இருப்பது எங்களுக்கு முரண்பாடல்ல. இரண்டுமே எங்கள் பெருமை!" என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அதேநேரம் தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை புதிதல்ல. 1970ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இதற்கான முயற்சியை மேற்கொண்டது. சாம்பல் நிற பின்னணியில், மேல் இடதுபுறத்தில் இந்திய மூவர்ண கொடியும், மைய பகுதியில் தமிழ்நாட்டின் கோபுர சின்னமும் இடம்பெறும் வகையில் வடிவமைப்பு தயாரிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போதைய மத்திய அரசு இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. அதேபோல நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அம்மாநில கொடிக்கு அனுமதி வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. 2018ல் சித்தராமையா ஆட்சியின்போது மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறங்களுடன் நடுவில் மாநில சின்னம் இடம்பெற்ற கொடி வடிவமைக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கும் இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை.தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி
கடும் எதிர்ப்பு
பிரிவினைவாத மனநிலை
மக்களுக்கு தேவை கொடி அல்ல
தமிழ்நாட்டின் முயற்சி
கர்நாடகா