வெள்ளம் சூழ்ந்த காட்சி.. கிளாம்பாக்கமே சாட்சி‌! சென்னையே இப்படினா? மற்ற ஊர்? விளாசிய பிரபலம்!

  • சென்னை: நேற்று மாலை பெய்த கனமழையால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலைமை சீரடைந்துள்ளது. இந்நிலையில், தலைநகர் சென்னையே இந்த அழகில் இருந்தால் மற்ற நகரங்கள் மற்றும் ஊர்களின் நிலையென்ன? என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

    Advertisement

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் கரைபுரண்டோடிய வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சில பகுதிகளில் வீடுகளைச் சுற்றியும் வெள்ளம் சூழ்ந்தது.

    Advertisement

    குறிப்பாக வடசென்னையின், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, பட்டாளம், பேசின் பிரிட்ஜ், கொடுங்கையூர், எம்.கே.பி. நகர், எருக்கஞ்சேரி, பெரவள்ளூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் பல சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, பெரம்பூர் பகுதியில் சாலைகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடு போல் காட்சியளித்தன. குறிப்பாக பெரம்பூர் பாரதி சாலை பட்டேல் ரோடு ஆனந்த வேலு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தேங்கிய மழைநீரில் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். சில இடங்களில் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்றதால், அவற்றைத் தள்ளிக்கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது.

    Advertisement

    பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானதுடன், தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், இன்று காலை இந்தப் பகுதிகளில் மழைநீர் வடிந்து சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. நேற்று மாலை மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து எவ்விதப் பாதிப்புமின்றிச் சீராக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் சென்னையே இந்த அழகில் இருந்தால் மற்ற நகரங்கள் மற்றும் ஊர்களின் நிலையென்ன? என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதிமுக 10 ஆண்டுகள் ஆண்டதில் சாலைகளில் வெள்ளம் தேங்குவதை பெரிதாய் தடுக்கவில்லை. திமுக எடுத்த முயற்சியிலும் ஓரளவே சரிசெய்ய முடிந்தது என்பதற்கு இந்த வீடியோவில் உள்ள.. நேற்றைய கிளாம்பாக்கம் சாலையே சாட்சி‌. சென்னையின் பல முக்கிய சாலைகளிலும் இதே நிலைதான். ஒருநாள் மழைக்கே இந்த கதி.

    Advertisement

    தவெக ஆட்சியில் அடுத்த ஆண்டாவது இந்நிலை மாற‌ வேண்டும். புதிதாய் சாலை போடும்போது சில மில்லி மீட்டர் சுரண்டி விட்டு போட வேண்டும். அதை திமுக ஆட்சியில் சிலமுறை மட்டுமே செய்தனர். அதன் பிறகு செய்யாததால் இப்படி நடக்கிறது.

    பலகோடியில் மழைநீர் வடிகால் அமைத்தாலும்.. இந்த சாலை மட்டத்தை உயர்த்தி கொண்டே சென்றால் மழைநீர் தேங்கத்தான் செய்யும். போதாக்குறைக்கு மெட்ரோ ரயில் மற்றும் இதர பாலங்களின் மேலே இருந்து மழைநீர் கொட்டி.. சாலையில் நடப்போர் மற்றும் பைக் ஓட்டுவோரை மேலும் வெறுப்பேற்றுகிறது. தலைநகர் சென்னையே இந்த அழகில் இருந்தால் மற்ற நகரங்கள் மற்றும் ஊர்களின் நிலையென்ன? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனுடன் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த வீடியோவையும் இணைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

    English Summary

    Blue Sattai Maran criticises Chennai’s rainwater stagnation after heavy showers and questions road elevation, stormwater drains and urban planning.