சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் செயலை விட, அவர்களின் பெற்றோர்களின் பேச்சே சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் வெளியான பேட்டிகளைப் பார்க்கும்போது, பைக் ரேஸில் ஈடுபட்ட சிறார்களின் பெற்றோர்களுக்கு அது ஒரு பெரிய குற்றமாகவே தெரியவில்லை. சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி, சிறார்களைக் கைது செய்ததற்காகக் காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டு பலரும் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (Twitter) தளப் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு செய்திச் சேனலின் வீடியோவைப் பகிர்ந்து, "சின்னப் பசங்களுக்குப் பைக் வாங்கித் தந்து, இப்படி நடுராத்திரியில் வெளியே அனுப்பி ஏன் மக்களைப் பயமுறுத்துகிறீர்கள்? அந்தப் பைக்குகளை நிரந்தரமாகப் பறிமுதல் செய்து, அந்தச் சின்னப் பசங்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும்" என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தி பைக் ஓட்டிய பசங்களுக்கு ஆதரவாகப் பெற்றோர் பேசும் வீடியோவில், "பாவம் சார்... சின்னப் பசங்க, விட்டுடுங்க... இதெல்லாம் ஒரு பெரிய கேஸா?" என்று காவல்துறையினரிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், "பெற்றோர்களையும் கைது செய்து, தலா ₹10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். பைக்குகளைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டு, அந்தத் தொகையைக் காவல்துறை நல நிதிக்குப் பயன்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "இந்தப் பெண்கள் பேசுவது அனைத்துமே சட்டவிரோதமானது. முதலில் காவல்துறை சட்டரீதியாக இந்தப் பெற்றோர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். மகன்கள் இரவில் வீட்டுக்கு வரவில்லை என்றால் கூட எப்படிப் பெற்றோரால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மூன்றாவது நெட்டிசன், "17 வயசுப் பையனுக்கு எதுக்கு பைக் வாங்கி கொடுத்து வண்டி ஓட்ட விடுறீங்க? இதனால் அவர்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனை. இந்தத் தவறுக்கு முழுக்க முழுக்கக் காரணம் பெற்றோர்கள்தான்" என்று கூறியுள்ளார். நான்காவது நெட்டிசன், "ஒழுங்காகப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாதவர்களுக்கு இத்தனை வாய் எதற்கு? கொழுப்பெடுத்த தறுதலைகளால் அப்பாவிகள் பலியாவது பரவாயில்லையா? இவர்கள் மீதுதான் முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஐந்தாவது நெட்டிசன், "குழந்தைகள் கெட்டுப் போவதற்குத் தாய்-தந்தையர்தான் காரணம். தப்பு பண்ணா கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும். ஆனால், செய்வது சரி என்று நியாயப்படுத்தினால் அவர்கள் இதற்கு மேலேயும் பல தப்புகளைச் செய்வார்கள்" என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆறாவது நெட்டிசன், "பைக் ரேஸ் ஓட்டி உன் மகன் மட்டும் அடிபட்டால் பிரச்சனை இல்லை; மற்றவர்களைச் சாவடித்தால் நீயும் ஒரு கொலைகாரிதான், உன் புருஷனும் ஒரு கொலைகாரன்தான்! செய்த தவறுக்கு நியாயம் பேசுவதா?" என்று மிகக் கடுமையாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.