லட்ச கணக்கில் லஞ்சம்! புகாரில் சிக்கிய அதிகாரிக்கு நற்சான்றிதழ்.. சுதந்திர தின விழாவில் சர்ச்சை

  • ராமநாதபுரம்: நேற்று நாடு முழுக்க சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், ராமநாதபுரம் நகராட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த பணியாளருக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. லஞ்ச வழக்கில் தொடர்புடைய அதிகாரி கார்த்திக்கேயன் என்பவருக்கு சிறந்த பணியாளருக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

    Advertisement

    இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    வருவாய் ஆய்வாளருக்கு நற்சான்றிதழ்

    நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுக்க உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். பின்னர் தகைசால் தமிழர் விருது, கல்பனா சாவ்லா விருது உள்ளிட்டவைகளை விஜய் வழங்கினார்.

    இதே போன்று தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் நடந்த சுதந்திர தின விழாவில், சாதனை புரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது ராமநாதபுரம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு நற்சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.

    Advertisement

    ரூ.25 லட்சம் லஞ்சம்

    ஏற்கனவே இவர் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் எப்படி நற்சான்றிதழ் வழங்கலாம் என பலரும் விமர்சிக்க தொடங்கினர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டார்கள்.

    இதில் கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அப்போது வருவாய் ஆய்வாளரான கார்த்திகேயன் ஜிபே கணக்கினையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜிபே மூலம் ரூ.25 லட்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முறையான கணக்கு விவரங்களை தெரிவிக்காத காரணத்தினால் கார்த்திகேயன் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டதற்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டது பெரும் சர்சையானது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவி இது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டதாக ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணைர் கூறுகையில், "நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தது தெரியவந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது" என்று கூறினார்.

    English Summary

    Bribery Case, Ramanathapuram: A certificate of appreciation awarded to an official facing a bribery case during the Independence Day celebrations at the Ramanathapuram Municipality office has sparked controversy. Following criticism, the municipal administration reportedly withdrew the certificate.