சென்னை: தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் வரும் 23 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக ரசிகர்கள் கட் அவுட், பிரமாண்ட பேனர்கள், போஸ்டர்கள் அடித்து வரும் நிலையில், தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்சி ஆனந்த் ஜனநாயகன் படத்தினை திருவிழா போல் கொண்டாடுமாறு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயகன் படம் தான் எனது கடைசிப் படம், அதற்கு பிறகு படம் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் அவரது கடைசிப் படமான ஜனநாயகனை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் தலைமையிடம் இருந்தே இந்த அறிவிப்பு வெளியானது அவர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கலுக்கு படத்தை ரீலீஸ் செய்ய கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் சென்சார் சிக்கல்களால், 6 மாதங்கள் கழித்து படம் தற்போது திரைக்கு வர உள்ளது. சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், வரும் 23 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த பட ரிலீசை எதிர்பார்த்து உள்ளனர். வழக்கமாகவே விஜய் படம் என்றால் தியேட்டர்கள் களை கட்டும். ரசிகர்கள் பல அடி உயரத்துக்கு கட் அவுட்கள் அடித்து வைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்க்க முடியும். ஆனால் தற்போது விஜய்யின் கடைசி படம் என்பதால் இதனை பிரமாண்டமாக கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக இருப்பதை விட இந்த முறை கூடுதல் உற்சாகத்துடனும், கொண்டாட்டங்களுடனும் ஜனநாயகன் படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், தவெக கட்சி தலைமையிடம் இருந்தே விஜய் படத்தை உற்சாகமாக கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதில் புஸ்சி ஆனந்த் கூறியிருப்பதாவது: ஜனநாயகன் முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் என்பதால் பட வெளியீட்டை பிரமாண்டமான திருவிழாவை போல கொண்டாட வேண்டும். தங்களது பகுதிகளில் உள்ள திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அப்போதே விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள், தியேட்டர்களில் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்க தொடங்கினர். இதற்கான புக்கிங்கும் தொடங்கி விறுவிறுப்புடன் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை ஆனது. ஆனால் கடைசி நேரம் வரை படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதன்பிறகு நடந்த சட்டப் போராட்டங்களும் தோல்வியில் முடிந்தன. தேர்தலுக்கு முன்பு விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டருக்கு வரும் முன்பே முழு படமும் ஹெச்டி தரத்தில் இணையத்தில் வெளியானது. இது படம் வெளியாகாமல் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. கிட்டத்தட்ட 1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திரையில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.23 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ்
திருவிழா போல கொண்டாடுங்க - புஸ்சி ஆனந்த்
முழு படமும் இணையத்தில் கசிந்தது