தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக்

  • சென்னை: புஸ்ஸி ஆனந்த் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.. ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கைகளை மிகக் கடுமையான எச்சரிக்கையாக இன்றைய கூட்டம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். மக்கள் சேவை மட்டுமே தவெகவின் லட்சியம் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாகவும் அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அரசை அமைத்துள்ள விஜய் தலைமையிலான தவெக, அடுத்த 3 மாதங்களுக்குள் அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை வேரோடு ஒழிக்கப்போவதாக அதிரடி சபதம் எடுத்துள்ளது.

    Advertisement

    ஊழல் செய்தால் நடவடிக்கை

    இதன் ஒரு பகுதியாக, இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், மக்களின் வீட்டு வாசலுக்கே அரசு திட்டங்களை நேரடியாகக் கொண்டு சேர்க்க "தமிழ்நாடு சிட்டிசன் கார்டு" (Tamil Nadu Citizen Card) என்ற புதிய திட்டம் அறிவியல் பூர்வமாக செயல்படுத்தப்படும் என அக்கட்சி உறுதி அளித்துள்ளது.

    அதற்கேற்றவாறு கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, 50 ஆண்டுப் பணியைச் சீரமைக்க வேண்டும். சிஎம்டிஏவில் வீடு கட்ட சதுர அடிக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு வந்தது. இதை ஒழித்திருக்கிறோம். கட்சி நிதி, அமைச்சர் நிதி, முதல்வர் நிதி ஆகியவற்றை ஒரு வாரத்தில் ஒழித்திருக்கிறோம். இதனால் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதில்லை. டிடிசிபி அப்ரூவல், டாஸ்மாக்கில் நடந்த ஊழல்களை ஒழித்திருக்கிறோம்

    Advertisement

    60 நாள் டைம் கொடுங்க

    நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை ஆகியவற்றின் டெண்டர்களை மறுசீரமைத்து வருகிறோம். அமைச்சர் பெயரைச் சொல்லி யாரும் முறைகேட்டில் ஈடுபடுவதில்லை. குவாரிகளில் கனிம வளங்கள் திருடப்படுவதில்லை, கரூரில் ஆற்று மணல் அள்ளப்படுவதில்லை. இவை அனைத்தும் நிர்வாக ரீதியான மாற்றம். அதிகாரிகள் மத்தியிலும் சீரமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. 60 நாட்கள் மட்டும் கொடுங்கள், ஒட்டுமொத்தமாக நிர்வாக மாற்றத்தைக் கொடுப்போம்" என்று உறுதி தந்திருந்தார்.

    புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

    இந்நிலையில், ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும் என கட்சியினருக்கு அமைச்சர் ஆனந்த் இன்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.

    Advertisement

    சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மாற்று கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தவெகவில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆனந்த், கட்சிக்காரர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    ஊழல் செய்தால் அடுத்த விநாடியே ஆக்‌ஷன்

    "லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்று சொன்னால் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

    Advertisement

    நாங்கள் எக்காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய வரவில்லை.. மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் செய்ய போகிறோம்.

    முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் இன்றைக்கு கட்சியில் வந்து சேருகிறார்கள். தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை எங்களிடம் தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக செய்து கொடுப்பார்கள். மாற்று கட்சியில் இருந்து வந்தாலும் தவெகவில் உரிய மரியாதை கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    ஊழலுக்கு எதிராக தவெக அமைச்சரின் பேசிய இந்த பேச்சு, இப்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெருத்த கவனத்தைப் பெற்றுள்ளது..!!

    English Summary

    Bussy Anand's Shocking Ultimatum!” Instant Dismissal for Corruption Warned at Panaiyur TVK Head Office