சென்னை: சென்னை பல்லாவரம் அருகே "கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம்" என்று ஆஃபர் முறையில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நந்தா (21) மற்றும் கோவிசங்கர் (20) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.1 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க சோதனைகள், கைது நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை பல்லாவரம் அருகே திருநீர்மலை பகுதியில் "கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம்" என்று ஆஃபர் முறையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஆஃபரில் கஞ்சா விற்று வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நந்தா (21) மற்றும் கோவிசங்கர் (20) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.1 கிலோ கஞ்சா, போதைக்காக பயன்படுத்தப்படும் 50 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.