சென்னை: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருக்கிறார். சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருப்பதற்கு, பாமக மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தாராபுரத்தில் தவெகவுக்கு அதிமுக கடுமையான போட்டியை அளித்து வருகிறது. ஆனால் மதுராந்தகம் தொகுதியில் தபால் வாக்குகள் முதலே தவெக தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கிறது. 5வது சுற்று அடிப்படையில் தவெக சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன.
அதேபோல் திமுக வேட்பாளர் பரந்தாமன் சுமார் 19 ஆயிரம் வாக்குகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக அடைந்துள்ள எழுச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவின் வாக்குகளை தவெக கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. திமுகவின் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளையும் தவெக எடுத்திருக்கிறது. அதற்கு திமுக கூட்டணியில் இருந்த விசிக, தற்போது தவெக பக்கம் நகர்ந்ததே முக்கிய காரணம். அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று கையை தூக்கிவிட்டது. இதனால் பாமக ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தவெக தொடக்கம் முதலே மதுராந்தகம் தொகுதியில் முன்னிலையை தக்க வைத்திருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு சுமார் 9% வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகள் தவெக பக்கம் சென்றுள்ளது. இதனால் தவெகவின் வெற்றிக்கு பாமக மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆதரவாக இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.