சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் திமுக, தவெக, அதிமுக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், மதுராந்தகம் தொகுதியில் 48 பேரும், தாராபுரத்தில் 39 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
வேட்பு மனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. 14 ஆம் தேதி வரை சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 15ம் தேதி திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை உள்ளிட்ட கட்சிகள் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நேற்று அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 8 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனுதாக்கலில் மதுராந்தகத்தில் 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். தாராபுரம் தொகுதியில் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் திமுக, தவெக, அதிமுக, நாதக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்புமனுவில் வயது மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள் முரண்பாடாக உள்ளன. கடந்த முறை தாக்கல் செய்த வேட்பு மனுவிற்கும் இப்போது தாக்கல் செய்து இருக்கும் வேட்புமனுவிலும் மாற்றங்கள் இருக்கின்றன. கடந்த முறை வயது 44 என்றும் இப்போது வயது 43 என்று குறிப்பிட்டுள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததிலும் தகவல்கள் முரண்பாடாக உள்ளன என புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், திமுக, தவெக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி இடைத்தேர்தல் களத்தில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என இரு தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.