திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்?

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அடுத்து எந்த கட்சிக்கு செல்லப் போகிறார் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுகவில் இணைய முயற்சி எடுத்தும் உடனடி வாய்ப்பு அமையாத நிலை உருவாகியுள்ளதாகவும், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்துடனான பேச்சுவார்த்தையிலும் சில நிபந்தனைகள் தடையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்..

    Advertisement

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, சி.விஜயபாஸ்கர் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். அதற்கு முன்பாகவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கிய விஜயபாஸ்கர், பின்னர் அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தனது அறிக்கையில், தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் தான் உயிராய் நேசித்த இயக்கம் சோதனைகளை சந்திக்கிறது என்றும், வேதனையுடன் இந்த முடிவை எடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    சி விஜயபாஸ்கர்

    இதன் பின்னர், அவர் எந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்ற கேள்வியே அரசியல் அரங்கில் முக்கிய விவாதமாக மாறியது. குறிப்பாக திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளின் பெயர்களே அதிகமாக பேசப்பட்டன. அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சி.விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து திமுக தலைமையுடன் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    திமுக

    திமுகவில் இணையத் தயாராக இருப்பதாக அவர் விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    ஆனால் திமுக தரப்பில் இருந்து உடனடி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காரணம், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தான் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இடைத்தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இருந்து விலகியவர்களை தமிழக வெற்றிக் கழகம் தனது பக்கம் இழுத்ததாக திமுக விமர்சிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஸ்டாலின் தயக்கம்

    அத்தகைய சூழலில், அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரை திமுக உடனடியாக இணைத்துக் கொண்டால் அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க சிரமம் ஏற்படும் என்ற கணக்கும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்ற கருத்து திமுக வட்டாரங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்துடனும் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இணைவது மட்டுமல்லாமல், இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய நிபந்தனை தடையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் அமைச்சரவை பதவி வழங்கப்படும் என்ற உறுதியை தர வேண்டுமென சி.விஜயபாஸ்கர் விரும்புவதாக கூறப்படுகிறது.

    அமைச்சர் பதவி

    ஆனால் தமிழக வெற்றிக் கழக தரப்பில் அதுபோன்ற உறுதியை தற்போது வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவர் தொடர்புடைய சில வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர் பதவி குறித்து முன்கூட்டியே உறுதி அளிப்பது கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியில் சேர்ப்பதில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், எதிர்காலத்தில் பதவி குறித்த எதிர்பார்ப்புகளில்தான் பேச்சுவார்த்தை சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    இரட்டை சிக்கல்

    ஒருபுறம் திமுக உடனடி முடிவு எடுக்க தயங்குகிறது. மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து எதிர்பார்த்த உறுதி கிடைக்கவில்லை. இந்த இரட்டை சிக்கலுக்கு நடுவே சி.விஜயபாஸ்கர் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியாமல் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் தலைவர்களில் ஒருவராக மாறியுள்ள சி.விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

    English Summary

    Former AIADMK minister C Vijayabaskar's next move remains uncertain as reports suggest hurdles in both DMK and TVK camps.