வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு?

  • சென்னை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுவதால், விஜயபாஸ்கர் தவெக பக்கம் தாவ தயராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகிய சில எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதேநேரத்தில், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சில முக்கிய தலைவர்கள் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த பட்டியலில் அதிகமாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றுதான் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

    சி விஜயபாஸ்கர்

    புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பல ஆண்டுகளாக செல்வாக்கு கொண்ட தலைவராக இருந்து வந்த அவர், தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையுடன் அதிகமாக தொடர்பில் இல்லை. இந்நிலையில், விஜய் தலைமையிலான அரசு அமைந்தபோது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் 21 பேரின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி தப்பியதற்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த அரசியல் முடிவுகளே முக்கிய காரணம். அந்த 21 பேரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

    Advertisement

    விஜயபாஸ்கர் அதிருப்தி

    ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு பல எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய நிலையில், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் மட்டும் இதுவரை நேரடியாக சந்தித்து பேசவில்லை. இதற்கிடையே விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு முன்பே அதிமுக தலைமையின் மீது விஜயபாஸ்கர் அதிருப்தியில் இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    திமுக அல்லது தவெக

    தேர்தல் பணிகளுக்காக பெரிய அளவில் நிதி செலவிடப்பட்டதாகவும், பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவரிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகும் தனது தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளில் பேசிய விஜயபாஸ்கர், "மக்களின் விருப்பமே தனது அடுத்தகட்ட முடிவை தீர்மானிக்கும்" என்று தொடர்ந்து கூறி வந்தார். இதனால் அவர் திமுக அல்லது தவெகவுக்கு போகக் கூடும் என்ற பேச்சு அப்போதே தொடங்கியது.

    Advertisement

    தவெகவில் எதிர்ப்பு

    இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான வாய்ப்புகளையும் விஜயபாஸ்கர் ஆராய்ந்ததாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே அதிமுகவில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் இணைந்திருந்ததால், அதே பாதையை விஜயபாஸ்கரும் பரிசீலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு தவெகவில் சில எதிர்ப்புகள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக பல்வேறு வழக்குகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்து விஜய்க்கு இருந்தது.

    திமுக

    இதன் பின்னர்தான் திமுக பக்கம் விஜயபாஸ்கரின் கவனம் திரும்பியது. கடந்த சில ஆண்டுகளாகவே திமுக தலைவர் ஸ்டாலினுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றதாகவும், தேர்தலுக்குப் பிறகு அந்த முயற்சிகள் தீவிரமடைந்ததாகவும் கூறப்படுகிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான சில முக்கிய நிர்வாகிகள் மூலம் தனது விருப்பத்தை விஜயபாஸ்கர் தெரிவித்ததாகவும், அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

    Advertisement

    ரகுபதி - மெய்யநாதன்

    இந்த நிலையில், விஜயபாஸ்கர் திமுகவில் இணைய தயாராக இருப்பதாக கட்சித் தலைமைக்கு கடிதம் கொடுத்த நிலையில், அவருக்கு எதிராக இரு முக்கிய தலைவர்கள் களமிறங்கியுள்ளனர். அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவின் முக்கிய முகங்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் விஜயபாஸ்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை

    விஜயபாஸ்கர் திமுகவில் இணைந்தால் மாவட்ட அரசியலில் புதிய அதிகார மையம் உருவாகும் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் செல்லபாண்டியும் தனது எதிர்ப்பை கட்சித் தலைமையிடம் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயபாஸ்கரை கட்சியில் இணைத்தால் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகுவேன் என்றும் அவர் எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அடுத்து என்ன?

    இதனால், விஜயபாஸ்கரை உடனடியாக திமுகவில் இணைக்கும் சூழல் தற்போது இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. மாவட்ட அளவில் எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. ஒருபுறம் அதிமுகவில் எதிர்காலம் குறித்து குழப்பம், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தாமதம், தற்போது திமுகவிலும் எதிர்ப்பு என்ற சூழலில் சி. விஜயபாஸ்கர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English Summary

    Internal opposition in Pudukkottai reportedly complicates former minister C. Vijayabaskar's alleged move towards DMK.