ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! நெருங்குது கிளைமேக்ஸ்?

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமா மற்றும் அதிமுகவிலிருந்து விலகப் போவதாக எடுத்த முடிவுக்குப் பிறகு, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா?, திமுகவுக்கு செல்லப் போகிறாரா? அல்லது அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையப் போகிறாரா என்ற விவாதம் புதுக்கோட்டை வட்டாரங்களில் வெகு தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், அதிமுகவில் நீண்டகாலமாக முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர். மாணவர் அணியில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், பின்னர் மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை கடந்து வளர்ந்தது.

    Advertisement

    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் இருந்து வந்தார். மருத்துவக் கல்வி பயின்ற காலத்திலேயே அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், கட்சியின் அடிப்படை அமைப்புகளில் இருந்து படிப்படியாக உயர்ந்தார்.

    சி விஜயபாஸ்கர்

    புதுக்கோட்டை மற்றும் விராலிமலை பகுதிகளில் தனக்கென வலுவான ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கியிருந்தார். சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக அமைச்சராக இருந்த காலத்தில் மாவட்ட அரசியலிலும், கட்சியின் அமைப்பு செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற பெயரை பெற்றிருந்தார்.

    Advertisement

    அதிமுகவில் அதிருப்தி

    ஆனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகள் அவரது சிந்தனையை மாற்றியதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் எதிர்காலம், தலைமை செயல்பாடு மற்றும் அரசியல் அணுகுமுறை குறித்து சில மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், சி.விஜயபாஸ்கரும் அதே அணியில் இருந்தார். இதன் தொடர்ச்சியாக அவரது மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட இடைவெளியை மேலும் அதிகரித்தது.

    எம்எல்ஏ பதவி

    இந்த சூழ்நிலையில்தான் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தனது கட்சி விலகல் அறிக்கையில், இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்து வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது அடுத்த கட்ட முடிவு என்ன என்பது தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்துடன் அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய்

    குறிப்பாக முதல்வர் விஜயுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் சில முன்னாள் அதிமுக தலைவர்களில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருப்பதும், எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அங்கு அதிகமாக இருப்பதும் விஜயபாஸ்கரை யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலுக்கு முன்பே விஜயின் அரசியல் எழுச்சியை அவர் கணித்திருந்ததாகவும், அதற்கேற்ப கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக தலைமையிடம் கருத்து தெரிவித்திருந்ததாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

    திமுக

    அதே நேரத்தில் திமுகவும் சி.விஜயபாஸ்கரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மத்திய மாவட்டங்களில் அவரது செல்வாக்கு மற்றும் விராலிமலை தொகுதியில் உள்ள வாக்கு வங்கி ஆகியவை திமுகவை யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெறும் வேட்பாளராக அவர் பார்க்கப்படுவதால், அவரை திமுகவில் இணைக்கும் முயற்சிககளும் நடக்கின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அண்ணாமலை

    இதற்கிடையில் புதிய அரசியல் பயணத்திற்கான முயற்சிகளில் விஜயபாஸ்கர் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அண்ணாமலையின் அணியுடனும் சி.விஜயபாஸ்கர் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் பலரும் அவரை தொடர்புகொண்டு பேசுவதாக கூறப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம்

    எனினும் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, சி.விஜயபாஸ்கரின் முதல் விருப்பம் தமிழக வெற்றிக் கழகமாகவே இருக்கலாம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆட்சியில் உள்ள கட்சியுடன் இணைவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு சாதகமாக அமையலாம் என்ற கணிப்பும் உள்ளது.
    அதேநேரத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் அவரது அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    English Summary

    Former AIADMK minister C Vijayabaskar’s next political destination remains unclear amid intense speculation.