அரசனை நம்பி.. விஜய்யை சந்திக்காத விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் மாறிய ப்ளான்! கொந்தளித்த சீனியர்கள்!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் முன்னிலையில் விரைவில் தவெகவில் இணைவார் என்ற தகவல்கள் வெளியாயின. ஆனால், தற்போது அந்த இணைப்பு நிகழ்ச்சி தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால், விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சி அதிருப்தி அதிகரித்தது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி ஆதரவு அணியினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த அணியில் முக்கிய தலைவர்கள்ல் ஒருவர்தான் சி. விஜயபாஸ்கர்.

    Advertisement

    சில நாட்களில் அரசியல் சூழல் மாறிய நிலையில், அதிமுகவில் இருந்த பல முக்கிய தலைவர்கள் தொடர்ந்து விலக ஆரம்பித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

    சி விஜயபாஸ்கர்

    இதைத் தொடர்ந்து, விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த சி. விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளில், அதிமுக தலைமையை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் மூலம் அவர் தவெகவில் இணைவது உறுதி என்றே அரசியல் வட்டாரங்கள் கருதின. இதற்கிடையில், தவெக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்தை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சி. விஜயபாஸ்கர் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

    Advertisement

    தவெக

    ஒருமுறை மட்டுமல்ல, இரண்டு முறை இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், ஜூன் 29ஆம் தேதி முதல்வர் விஜய் முன்னிலையில் நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி. விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவார் என்ற தகவல் பரவியது. ஆனால், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளதால், அதில் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இணைப்பு விழா

    இதன் காரணமாக இணைப்பு விழா ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த காரணம் மட்டுமல்லாமல், தவெகவுக்குள்ளும் சில எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சி. விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் குட்கா முறைகேடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக குட்கா வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஒருவரை கட்சியில் இணைப்பது தவெக பற்றி தவறான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்ற கருத்தை தவெகவின் சில மூத்த நிர்வாகிகள் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    குட்கா வழக்கு

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சில தவெக நிர்வாகிகளும் இதே கருத்தை வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "ஊழலுக்கு எதிராக அரசியல் செய்கிறோம் என்று கூறும் கட்சியில், ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் தலைவர்களை இணைப்பது சரியானதா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சி. விஜயபாஸ்கரின் இணைப்பு குறித்து கட்சி கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம்

    இருப்பினும், இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகம் தரப்பிலோ, சி. விஜயபாஸ்கர் தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதற்கிடையில், ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் இணைவார் என்ற தகவலும் இன்னும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    தவெக தலைமை

    ஆனால், எதிர்ப்புகள் காரணமாக அந்த நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதுவரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former AIADMK minister C. Vijayabaskar’s reported TVK induction faces delay amid scheduling changes and internal concerns within the party.