எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு

  • சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் கட்சித் தலைமையை விமர்சிக்கும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து அவர் பதிவிட்டு இருக்கும் ட்வீட், அதிமுகவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அதிமுகவில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மீதமுள்ள 21 எம்.எல்.ஏக்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்களின் எம்.எல்.ஏ பதவி தப்பியது.

    Advertisement

    சிவி சண்முகம் விமர்சனம்

    21 எம்.எல்.ஏக்களில் சிவி சண்முகமும், சி விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் இருந்து வந்தனர். இருவரும் தவெகவில் இணையலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், சி.விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவரை தவெகவில் இணைக்க விஜய் தயக்கம் காட்டுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதேபோல திமுக பக்கம் சி. விஜயபாஸ்கர் செல்லக்கூடும் என்ற ஒரு பேச்சும் எழுந்தது.

    ஆனால், சி.விஜயபாஸ்கரும், சிவி சண்முகமும் கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    சி விஜயபாஸ்கர் பதிவு

    உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. 'வெற்றிக்கான பாதை அல்ல.' வரலாறு நினைவில் வைத்திருப்பது, எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல.. எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்." என்று பதிவிட்டுள்ளார்.

    ஒரு பக்கம் அதிமுக நிர்வாகிகள் கொத்து கொத்தாக தவெகவில் சேர்ந்து வரும் நிலையில், சிவி சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் கலகக்குரலை கூர்மை படுத்தியிருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "அ.தி.மு.க.வில் இருந்து விலகி செல்பவர்கள் என்ன காரணம்? என்ன குறை சொல்லுகிறார்கள்? தலைமை அனுசரித்து போகவில்லை. தலைமை தன் தவறைத் திருத்திக் கொள்ள மறுக்கிறது.

    Advertisement

    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

    யாருடைய கருத்தையும் கேட்க தயாராக இல்லை. அதிமுக என்பது ஒரு குடும்பக் கட்சி அல்ல. இது தொண்டர்கள் கட்சி. மறைந்த எம்ஜிஆர்., ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட அதிமுகவின் நிலைமை இன்று ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் என்ன செய்ய வேண்டும்? எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    தற்போதைய நிலையில் இருந்து மீண்டும் அ.தி.மு.க.வை ஒரு வலிமையான இயக்கமாக உருவாக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். கூட்டத்தை கூட்டுங்கள். பொதுக்குழுவைக் கூட்டுங்கள். உங்கள் விருப்பப்படியே ஒரு தேதியிலே கூட்டுங்கள். இல்லை அதற்கு முன்பு, செயற்குழுவையாவது கூட்டுங்கள்" என்று தனது பாணியில் காட்டமாக பேசியிருந்தார். சிவி சண்முகத்தின் நேற்றைய இந்த பிரஸ்மீட் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

    English Summary

    C Vijayabaskar: Former AIADMK minister C. Vijayabaskar has indirectly criticised party leadership through a social media post, days after C.V. Shanmugam's remarks against Edappadi K. Palaniswami. The developments have intensified speculation over growing dissent and internal turmoil within the AIADMK.