சென்னை: நாளை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாளை காலை மாமல்லபுரத்தில் நடைபெறும் விழாவில் தவெகவில் இணைகிறேன் என்றும், தவெகவில் இணைந்து என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் கடந்த (ஜூன்) மாதம் 16 ஆம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். இதனால் விராலிமலை தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து இசக்கி சுப்பையா உள்பட 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் விஜயபாஸ்கரும் விஜய்யின் பிறந்தநாள் அன்று தவெகவில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் விஜயபாஸ்கர் மீது குட்கா உள்ளிட்ட ஊழல் வழக்கு இருப்பதாலும், தன்னை தூய சக்தி என காட்டிக்கொள்ளும் தவெக விஜயபாஸ்கரை இணைத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலும் விஜயபாஸ்கரை இணைக்க தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கரும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனால் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. சி விஜயபாஸ்கரும், எம்.ஆர் விஜயபாஸ்கரும் நாளை தவெகவில் இணையலாம் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பார்ந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம். நலமே சூழ்க! கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய 'கோவிட்' பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள். நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்களாகிய தாங்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன். வாருங்கள்! சந்திப்போம்! நன்றி!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவிலிருந்து 5 முன்னாள் அமைச்சர்கள், 15 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்ட முக்கிய முகங்கள் நாளை வியாழக்கிழமை தவெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 7 மணி நேரம் பயணித்து தவெகவில் இணைவதற்கு வருவதில் இருந்தே தொண்டர்கள் எவ்வளவு அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்" என்றார். சி. விஜயபாஸ்கர் மட்டுமின்றி, எம்.ஆர் விஜயபாஸ்கரும் நாளை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது ஆதரவாளர்கள் 12 ஆயிரம் பேர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்றே அவர்கள் சென்னை கிளம்புகிறார்களாம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் இணைய உள்ளதாக பேசப்படுகிறது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கரோடு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் மொத்தமாக தவெகவில் இணையலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாகவும் பேசப்படுகிறது.நாளை தவெகவில் இணைகிறேன்..
மாற்றத்தின் புதிய தொடக்கமாக
200 பேருந்துகளில்..
எம்.ஆர் விஜயபாஸ்கரும் இணைகிறார்?