பரம்பரை சொத்தை விற்காமல் பாகப்பிரிவினை செய்யலாமா? பட்டா பெயரில் இருந்தால் சொத்து அவருக்குத்தானா?

  • சென்னை: பரம்பரையாக வந்த சொத்து என்றாலே, விற்று பணத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தில் நினைப்பது இயல்புதான். ஆனால் சொத்தை விற்பதுதான் ஒரே வழி கிடையாது. அப்படியானால் பரம்பரை சொத்தை விற்காமல் பாகப்பிரிவினை செய்ய முடியுமா? பட்டா பெயரில் இருந்தால் சொத்து அவருக்குத்தான் சொந்தமா? போன்ற சந்தேகங்கள் எழுவதும் இயல்புதான். இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    பரம்பரை சொத்து என்பது, குடும்பத்தில் முன்னோர்களிடம் இருந்து தலைமுறை தலைமுறையாக வாரிசுகளுக்கு வந்த சொத்து. உதாரணமாக, தாத்தாவுக்கு இருந்த நிலம் அல்லது வீடு, அவரது வாரிசுகள் மூலம் அடுத்த தலைமுறைக்கு வந்திருந்தால் அது பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒரு சொத்து எப்படி வந்தது, யார் வாரிசுகள் என்பதன் அடிப்படையில்தான் உரிமை முடிவு செய்யப்படும்.

    Advertisement

    பரம்பரை சொத்து

    அப்படியானால் பரம்பரை சொத்தை விற்காமல் பாகப்பிரிவினை செய்ய முடியுமா என்றால், கண்டிப்பாக முடியும். குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உரிமை இருக்கும் சொத்தை கட்டாயமாக விற்றுத்தான் பங்குகளை பிரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாரிசுகள் தங்களுக்குள் உடன்பட்டு, சொத்தை தனித்தனி பங்குகளாகப் பிரித்துக்கொள்ள முடியும்.

    உதாரணமாக, ஒரு குடும்பத்துக்கு சொந்தமான ஒரு நிலத்தில் 3 வாரிசுகளுக்கு உரிமை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்தை விற்று கிடைக்கும் பணத்தை 3 பேரும் பிரித்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் நிலத்தையே 3 பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பகுதியை ஒதுக்கவும் முடியும்.

    Advertisement

    பாகப்பிரிவினை ஆவணம்

    இதற்காக முறையான பாகப்பிரிவினை ஆவணம் தயாரித்து, தேவையான முறையில் பதிவு செய்வது முக்கியம்... ஆனால் வெறுமனே குடும்பத்தில் உட்கார்ந்து பேசி இந்தப் பகுதி உனக்கு, அந்தப் பகுதி எனக்கு என்று முடிவு செய்வது, அந்த சொத்து மற்றும் உரிமையின் தன்மையைப் பொறுத்தது. ஆனாலும், ஆவணங்களை சரியாக வைத்திருப்பது எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.

    அதேபோல், ஒரு வாரிசு மட்டும் முடிவு செய்து சொத்தைப் பிரித்துக்கொள்ள முடியாது... உரிமை உள்ளவர்கள் அனைவரின் பங்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்படவில்லையானால், பாகப்பிரிவினைக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

    Advertisement

    பட்டா பெயரில் இருந்தால் சொத்து சொந்தமா?

    அதேபோல ஒரு சொத்தின் பட்டா ஒருவருடைய பெயரில் இருக்கிறது என்பதற்காக மட்டும், அந்த நபருக்குத்தான் அந்த சொத்தின் முழு உரிமையும் உள்ளது என்று முடிவு செய்துவிட முடியாது.

    பட்டா என்பது நிலம் தொடர்பான வருவாய் பதிவுகளில் முக்கியமான ஆவணம்.. ஆனால் சொத்தின் உரிமையை தீர்மானிக்கும்போது பட்டாவை மட்டும் பார்த்து முடிவு செய்ய முடியாது. சொத்து எப்படிக் கிடைத்தது, அதற்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் என்ன சொல்கிறது, பாகப்பிரிவினை நடந்துள்ளதா, உயில் இருக்கிறதா, வேறு வாரிசுகள் யார் என்பன உள்ளிட்ட பல விஷயங்களையும் பார்க்க வேண்டும்.

    Advertisement

    தந்தையின் சொத்து வாரிசுக்.க

    உதாரணமாக, தந்தையின் சொத்து வாரிசுகளுக்கு உரியதாக இருக்கும் நிலையில், அந்த சொத்தின் பட்டா மட்டும் ஒருவருடைய பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்றால், மற்றவர்களின் உரிமை தானாகவே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. பட்டா மாற்றம் என்பது மட்டும் சொத்தின் முழு உரிமையை உருவாக்கிவிடும் என்று நினைப்பது சரியான அணுகுமுறை அல்ல.

    உண்மையில் யார் யாருக்கு உரிமை இருக்கிறது, ஒவ்வொருவரின் பங்கு என்ன, அதற்கான ஆவணங்கள் என்ன என்பதையெல்லாம் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

    சொத்து விஷயத்தில் ஒரு சின்ன தவறு கூட பின்னாளில் குடும்பத்துக்குள் பெரிய பிரச்சினையாக மாறிவிடலாம். அதனால் பரம்பரை சொத்தை விற்கும் முன்போ, பாகப்பிரிவினை செய்யும் முன்போ, பட்டா மாற்றும் முன்போ சம்பந்தப்பட்ட ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து, தேவையான இடத்தில் சட்ட ஆலோசனையையும் பெறுவது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..!!!

    English Summary

    Can Ancestral Property Be Divided Without Selling? Does Patta Name Mean Full Ownership?