சென்னை: "முதல்வர் விஜய் தனது சொத்துகளின் பட்டியலை ஆடிட்டரை நம்பி வழங்கியிருப்பார். அவர் தான் சொத்துப் பட்டியலை வேட்புமனுவில் தாக்கல் செய்திருப்பார். ஆடிட்டர் சில தவறுகள் செய்திருந்தால் அதற்கு விஜய்யைப் பொறுப்பாக்கி அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க முடியுமா?" என தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோசப் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்துகளை மறைத்துள்ளதாகவும், தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டி அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.
பெரம்பூர் தொகுதி வாக்காளரான தினேஷ் சார்பில் வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 'முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், கொடைக்கானல் வில்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்துக்கு உரிமையாளர் என சொந்தம் கொண்டாடுகிறார். வில்பட்டியில் உள்ள அந்த நிலத்தை 1997-ல் ரூ.30 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கியதாக கூறியுள்ளார். அந்த சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறியுள்ளார். ஆனால், 'அ' பதிவேட்டில் அந்த சொத்து அரசு புறம்போக்கு நிலம் என உள்ளது. நீலாங்கரையில் உள்ள தனது பங்களா வாரிசுரிமை மூலம் பெறப்பட்டுள்ளது என முதல்வர் விஜய் கூறுகிறார். உண்மையில் அந்த சொத்து கடந்த 2005 ஆம் ஆண்டு தனது தந்தை சந்திரசேகர் பதிவு செய்து கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் மூலம் பெறப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 100 சதுர அடி நிலம் மற்றும் 5 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட அந்த பங்களாவின் மதிப்பு பத்திரத்தில் ரூ.2.75 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விஜய் தனது தேர்தல் வேட்புமனுவில், அந்த நிலத்தில் 18 ஆயிரத்து 633 சதுர அடியில் கட்டுமானம் கட்ட ரூ.18.73 கோடியை செலவிட்டுள்ளதாகவும், தற்போது அந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.20 கோடி என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2010-ல் சென்னை போரூரில் சுமார் 34 ஆயிரம் சதுரஅடி பரப்புள்ள விவசாயம் சாரா நிலத்தை ரூ.91.13 கோடிக்கு வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால் பதிவுத்துறை ஆவணங்களின்படி ரூ.7.5 கோடிக்கு 20 ஆயிரத்து 773 சதுர அடி நிலம் மட்டுமே வாங்கியுள்ளார். சென்னை பாடியில் தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.7 கோடி மதிப்புள்ள 11 ஆயிரத்து 854 சதுர அடி கொண்ட வணிக வளாகம் உள்ள இடத்தை 2009-ல் ரூ.1.95 கோடிக்கு வாங்கியதாகவும், கட்டுமானத்துக்காக ரூ.3.9 கோடியை செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உண்மையில் 23 ஆயிரத்து 460 சதுர அடி கொண்ட அந்த வணிக வளாகத்தை கடந்த பிப்ரவரி 12 அன்று ரூ.35 கோடிக்கு விஜய் விற்பனை செய்துள்ளார். ரூ.35 கோடிக்கு விற்கப்பட்ட இந்த சொத்தை ரூ.7 கோடி என மதிப்பைக் குறைத்துக் காட்டியுள்ளார். இதேபோல பண்ருட்டியில் உள்ள ரூ. 30 கோடி மதிப்புள்ள சொத்தை விஜய் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். ஆகவே, திட்டமிட்டு வேண்டுமென்றே சொத்துகளை மறைத்தும், மதிப்பை குறைத்தும் வேட்புமனுவில் தவறான தகவல்களை விஜய் தெரிவித்துள்ளதால் அவர் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, "வேட்பு மனுவில் ரூ.600 கோடிக்கு மேல் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் சொந்தமான சொத்துகளின் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் என எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தகவலையும் மறைக்கவில்லை. அனைத்து விவரங்களையும் 99 சதவீதம் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில தவறுகள் இருக்கலாம் தான். அதற்காக வேட்புமனுவை ஏற்றது தவறு என சொல்ல முடியாது. வேட்புமனுவை ஏற்றது சரிதான்." என வாதிட்டார். மேலும், 'முதல்வர் விஜய்க்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, கற்பனையானவை, பொய்யானவை, தவறான புரிதல் மற்றும் ஊகங்களின் அடிப்படையிலானவை என்பதால் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்' என வாதிட்டார். இன்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி வி.லட்சுமி நாராயணன், "நான் நீதிபதியாகி எனது சொத்துகளை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது எனது ஆடிட்டரை நம்பியிருந்தேன். அதேபோல முதல்வர் விஜய்யும் தனது சொத்துகளின் பட்டியலை ஆடிட்டரை நம்பி வழங்கியிருப்பார். அவர் தான் அந்த சொத்துப் பட்டியலை வேட்புமனுவில் தாக்கல் செய்திருப்பார். ஆடிட்டர் சில தவறுகளை செய்திருந்தால் அதற்கு முதல்வரை பொறுப்பாக்கி அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க முடியுமா? திரைத்துறையில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த ஒருவர் ரூ.600 கோடிக்கு மேல் தனக்கு சொத்துகள் உள்ளது என சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கும்போது ரூ.20 லட்சம் அல்லது ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள சொத்துகளை மறைத்து விட்டதாக கூறி தேர்தலில் வெற்றியை செல்லாதது ஆக்கிவிடுமா?' என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் பதில் வாதங்களை முன்வைப்பதற்காக விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். நாளை, விஜய்க்கு எதிராக மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.