சென்னை: தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த 6 அடுக்கு ஒப்பந்ததாரர் பதிவு முறை முற்றிலும் எளிமையாக மாற்றப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வகைப்பாடானது 6 அடுக்கில் இருந்து 4 அடுக்காக மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் காரணமாக பினாமி நிறுவனங்கள் பொதுப்பணித்துறை ஏலத்தில் பங்கேற்பது கடினம் என்று சொல்கிறார்கள். இந்த அரசாணை என்ன.. இதனால் ஏற்பட போகும் மாற்றம் என்ன என்பதை பார்ப்போம்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த 6 அடுக்கு ஒப்பந்ததாரர் பதிவு முறை, இனி எளிமையான 4 அடுக்கு முறையாக மாற்றப்படுவது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஒப்பந்ததாரர் பதிவு முறையில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய ஒப்பந்ததாரர் வகைப்பாட்டின்படி, ரூ.10 கோடிக்கு மேல் பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-I ஒப்பந்ததாரர்கள் உத்தரவாத தொகையாக ரூ.1.5 கோடி சொத்து மதிப்பு வழங்க வேண்டும். ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-II ஒப்பந்ததாரர்கள் ரூ.75 லட்சம் உத்தரவாதத்தொகை வழங்கினால் போதும். ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-III ஒப்பந்ததாரர்கள் ரூ.15 லட்சத்தை உத்தரவாதத்தொகையாக கட்டினால் போதும். மேலும், ரூ.1 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-IV ஒப்பந்ததாரர்கள் 15 சதவீத சொத்து மதிப்பு அல்லது அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் மட்டும் கட்டினால் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 15 சதவீத மின்னணு வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டும். புதிய பதிவு மற்றும் தர உயர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், பதிவு கட்டணம் ரூ.1 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று, ஒரு நபர் அல்லது நிறுவனம் ஒரே பிரிவில் ஒரு பதிவு மட்டுமே வைத்திருக்க முடியும். உரிமையாளர் அல்லது பங்குதாரர் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். போலி அல்லது பினாமி பதிவுகளை தவிர்க்க, கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அனுபவம், ஜி.எஸ்.டி. மற்றும் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் சரிபார்க்கப்படும். இதற்காக நிகர மதிப்புச் சான்றிதழ், வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் விதிமுறைகளை மீறினால் அல்லது பணிகளைச் சரியாகச் செய்யத் தவறினால், என்ஜினீயர்கள் குழுவின் பரிந்துரைப்படி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை டெண்டர்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்கள் 'இ-சேவை' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பணிகளை சரியாகச் செய்யாதது, போலி ஆவணங்கள், வரி செலுத்தத் தவறுதல், தரமற்ற பொருட்கள் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடைக்காலம் முடிந்தவுடன் தானாகவே அந்தத் தடை நீங்கியதாகக் கருதப்படும். தடை செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் இந்தத் தடையால் பாதிக்கப்படாது" இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆவணங்கள் இல்லாத அல்லது தகுதியற்ற நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெறுவது இனி சிரமம் தான். ஆனால், உண்மையான உரிமையாளரை மறைத்து நிறுவனம் நடத்துபவர்களைக் கண்டறிய இதுமட்டுமே போதுமா என்றால், நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒருவர் தனது பெயரிலும், மனைவி அல்லது உறவினர்கள் பெயரிலும் தனித்தனி நிறுவனங்களை நடத்தி வருவார். அப்படி நடத்தும் எல்லா நிறுவனத்துக்கும் தனித்தனி ஜிஎஸ்டி பதிவு, வங்கிக் கணக்கு, வருமான வரிக் கணக்கு இருக்கும். எனவே ஆவணங்களை மட்டும் சரிபார்ப்பதன் மூலம் அவை ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருப்பதை எப்போதும் கண்டுபிடிப்பது கடினம். அடுத்ததாக உண்மையில் நிறுவனத்தின் ஆவணங்களில் ஒருவரின் பெயர் இருந்தாலும், உண்மையான முடிவுகளை வேறொருவர் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. உண்மையான பயனாளி உரிமையாளர் யார், பணத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறியாமல் இதைத் தடுக்கவே முடியாது. மூன்றாவது விஷயம்.. ஒரு நபர் ஒரே பிரிவில் ஒரு பதிவு மட்டுமே வைத்திருக்கலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளதால் ஒரே சட்டப்பூர்வ நிறுவனத்தின் பல பதிவுகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் வெவ்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களின் பின்னால் ஒரே நபர் இருப்பதைத் தனியாக விசாரித்தால் தான் தடுக்க முடியும். குறிப்பாக ஒரே குழுவைச் சேர்ந்த நிறுவனங்கள் போட்டியைப் போலக் காட்டுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நிறுவனத்தின் நிதி உண்மையில் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய வேண்டும். அதேபோல் அரசு வெளிப்படைத்தன்மைக்காக புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு எத்தனை போலி அல்லது பினாமி பதிவுகள் கண்டறியப்பட்டன என்ற விவரங்களை வரும் ஆண்டுகளில் வெளியிட வேண்டும்.பெரும்பாக்கம் ஓசோன் கிரீன்ஸ் அடுக்குமாடி.. 8 வருடங்களாக இல்லாத மின்சாரம்.. நிர்மல் குமார் தந்த உறுதி
பினாமி பதிவுகளை தவிர்க்க திட்டம்
திருநெல்வேலியில் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி.. 16 வயது முதல் ஆள் ஆளுக்கு சீரழித்து கொடுமை