கனடா பெண்ணை ஏமாற்றி 5 முறை ஆன்லைன் பூஜை.. சென்னை பெசன்ட் நகர் பீச் கிளி ஜோசியர் யார் தெரியுமா?

  • சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த கனடா வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம், மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார் ஒரு கிளி ஜோசியக்காரர்.. தோஷம் கழிப்பதாக சொல்லி, வீடியோ காலில் நிர்வாண பூஜையும் நடத்தி, அந்த வீடியோவை வைத்து பணமும் பறித்துள்ளார்.. இது தொடர்பாக போலீசார் விசாரிக்க சென்றால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கனடாவில் வசித்து வருகிறார் அந்த 37 வயது இலங்கை தமிழ்ப் பெண்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இப்போது கனடாவில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த பெண்ணுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு.. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு சுற்றுலா வந்திருக்கிறார்.. அப்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று பேசி வந்துள்ளார். இதற்காகவே சென்னை கோடம்பாக்கத்தில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்.

    தமிழகம் முழுவதும் பல்வேறு ஆன்மீக இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்த அவர், சில நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரைக்கும் சென்றுள்ளார். அங்குதான், கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்த இசக்கி முத்து (45) என்பவரிடம் ஜோசியம் பார்த்துள்ளார்.

    சென்னை பெசன்ட் நகர் கிளி ஜோசியர்

    உடனே அந்த பெண்ணிடம் இசக்கிமுத்து, "உங்க இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் நான் நிறைய பார்த்திருக்கிறேன்.. டிவி நிகழ்ச்சிகளில் நன்றாக பேசுகிறீர்கள்" என்று சொல்லியிருக்கிறார்.. அத்துடன் தனக்கு நடந்த விவாகரத்து, தன்னுடைய அம்மாவுக்கு வந்துள்ள கேன்சர் நோய் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களையும் அப்பெண்ணிடம் கிளி ஜோசியர் சொல்லி உள்ளார்.. இதையெல்லாம் கேட்டதுமே, ஜோசியர் மீது அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்திக் கொண்ட இசக்கி முத்து, "உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமல் உள்ளது . சனி பகவான் உங்களை கெட்டியாக பிடித்து விட்டார். தோஷத்தை கழித்தால் எல்லாம் சரியாயிடும்.. ஆனால் அதற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும். அதற்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.. நான் சொல்கிறபடியே தோஷத்தை கழிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் உன் அம்மாவுக்கு வந்த புற்றுநோய் போல உங்களுக்கும் வந்துவிடும்" என்று கூறியிருக்கிறார்.

    வீடியோ காலில் நிர்வாண பூஜை

    இதைக்கேட்டு பயந்து போன கனடா பெண், கிளி ஜோதிடர் சொன்னதற்கு சம்மதித்துள்ளார். பிறகு இரவு 12 மணிக்கு தான் தங்கியிருக்கும் அறையில் உடலில் எந்த துணியும் இல்லாமல் நிற்க வேண்டும் என்றும், வீடியோ காலில் பார்த்தபடி கோயிலில் யாகம் நடத்தி பூஜை செய்வதாகவும் இசக்கி முத்து சொல்லி உள்ளார். அதை நம்பிய பெண், வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி பூஜையில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று 5 முறைக்கு மேல் பூஜை நடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பிறகு, அந்தப் பெண்ணுக்கு போனில் தொடர்பு கொண்ட இசக்கி முத்து, நிர்வாணமாக இருந்த வீடியோவை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் வீடியோவை திரும்ப தந்துவிடுவதாகவும், இல்லாவிட்டால் இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்துவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதனால் மேலும் அச்சமடைந்த பெண், சுமார் ரூ.70 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை காட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மாம்பலம் மகளிர் போலீஸ்

    இதைக்கேட்டு ஆவேசமடைந்த அந்தப் பெண் மாம்பலம் மகளிர் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் செல்போன் நம்பர், ஜிபே மூலம் பணம் பெற்ற நம்பரை வைத்து விசாரணை நடத்தினார்கள்.. அதில், இசக்கி முத்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பாலமார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சொந்த ஊரில் உள்ள கருப்பசாமி கோயிலில் சாமி ஆடுபவராகவும், கிளி ஜோசியராகவும் அவர் இருந்துள்ளார்.

    சென்னைக்கு வந்து பிராட்வே பஸ் ஸ்டாண் எதிரே உள்ள பவுசியா மேன்சனில் தங்கி, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விழாக்காலங்களில் திருவண்ணாமலை, திருச்செந்தூர், திருத்தணி கோயில்களுக்கும் சென்று பக்தர்களிடம் ஜோசியம் பார்த்து வந்துள்ளார்.

    செல்போன் டவர் உதவியுடன் அவரைத் தேடிய தனிப்படை போலீசார், குற்றாலத்தில் வைத்து இசக்கி முத்துவை கைது செய்தனர். அவரது செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கனடா பெண்ணை போன்று வேறு பெண்களிடமும் நிர்வாண பூஜை நடத்தி வீடியோ எடுத்து பணம் பறித்துள்ளாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது...!!!

    English Summary

    Canada Woman Nude Ritual.. 5 Times Online Pooja at Chennai Besant Nagar Beach! Who Is the Parrot Astrologer?