சென்னை: சென்னை அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாக பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிடப்பட்டுள்ள பதிவில் மேலும் கூறுகையில், தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் "Reels" ஆட்சியின் "Reality"-யை மக்களுக்கு உணர்த்துகிறது.
குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தை சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்தவருக்கும் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களிடம் இருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது. எனவே, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்றத்தில் இன்று பதிலுரை நிகழ்த்தவிருக்கும் முதல்வர், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை குற்றங்கள், காவல் மரணங்கள் என இதுவரை 500 - க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ள அவலத்தைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும்! சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை சமன்செய்ய தவெக அரசு என்னென்ன செயல்திட்டங்கள் வைத்துள்ளது என்பதையும் சமர்ப்பிக்க வேண்டும்!" இவ்வாறு கூறியுள்ளார். பெசன்ட் நகர் படுகொலை சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகியை பழிக்குப் பழியாகத் தீர்த்துக்கட்டிய 5 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த 45 வயதாகும் கண்ணன் என்பவர் அதிமுகவில் வட்டச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக-வில் இணைந்தார். மேலும், ஐ.டி. நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். கண்ணன் நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில் வண்ணான்துறை ராமசாமி அவென்யூ, எல்லையம்மன் கோவில் தெருவில் தனது நண்பர்கள் 4 பேருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென கண்ணனை சுற்றி வளைத்தனர். அதிர்ச்சியடைந்த கண்ணன் உயிர் தப்புவதற்காக ஓட்டம் பிடித்தார். ஆனால், சிறிது தூரத்திலேயே அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.