பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட கூடாது.. தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

    Advertisement

    சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். சென்னையில் தலைமை செயலகம் கட்ட மூன்று இடங்களை அரசு பரீசிலித்து வருவதாக தகவல் வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி வளாகம், பட்டினப்பாக்கம் என மூன்று இடங்களை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு

    இதில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று கடந்த வாரம் அரசு அரசாணை வெளியானது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டினால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அங்கு வசிக்கும் மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, இட நெருக்கடி மிகுந்த பட்டினப்பக்கத்தில் தலைமை செயலகம் கட்டக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

    இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    மக்கள் வந்து செல்ல சிரமம்

    தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக, தற்போதைய தவெக அரசு அறிவித்து உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி ரூபாய் செலவு செய்வதை விட, புனித ஜார்ஜ் கோட்டையில், தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டிடத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால், இவ்வளவு பெரிய தொகை செலவாகாது. மக்களின் வரிப்பணமும் சேமிக்கப்படும். அந்த கட்டிடம் நல்ல நிலையில் தான் உள்ளது.

    சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமன இடங்களுக்கு அருகில் தலைமை செயலகம் உள்ளது. எனவே, தலைமை செயலகம் இடமாற்றம் செய்யப்பட்டால், பொது மக்கள் வந்து செல்வது மிகவும் கடினமாகிவிடும். பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கப்பட்டால், ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். அங்குள்ள மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும்.

    Advertisement

    எப்போது விசாரணைக்கு வரும்?

    எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 12 ஆம் தேதி தலைமை செயலாளர், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆகியோருக்கு மனு அளித்தேன். எனினும் தற்போது வரை எந்த பதிலும் இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    எனவே, இந்த திட்டத்தை கைவிடும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் தீர்வு எட்டும் வரை, தலைமை செயலக கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மீனவர்களின் கடும் எதிர்ப்பால் பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டிடம் கட்டும் முடிவில் இருந்து அரசு பின்வாங்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருவது கவனிக்கத்தக்கது

    English Summary

    High Court: A case has been filed in the Madras High Court seeking to halt the construction of the new Secretariat in Pattinapakkam, Chennai. The petition was filed by R.S. Tamilvendhan, a lawyer from Kodambakkam. It is expected that the petition will come up for hearing soon.