“பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு” அமைச்சர் செங்கோட்டையன் பரபர தகவல்

  • சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர், முகவரி, சாதி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்ட தரவுகளுடன் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், "இப்ப பள்ளிக்குச் செல்கிற குழந்தைகள் அனைவருக்குமே ஆண்டுதோறும் அவர்கள் சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு மாற்றத்தை உருவாக்குவதற்காக நடவடிக்கை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். ஐடென்டி கார்டு என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளையும் முதல்வர் ஆணையிட்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் முதலினுடைய உத்தரவுக்கு இணங்க அந்தப் பணிகள் நிறைவேற்றப்படும்.

    Advertisement

    மாணவர்களின் முகவரி, அவருடைய சாதிச் சான்றிதழ், அவருடைய பிளட் குரூப் (Blood Group), அதற்குப்பிறகு ஆதார் அட்டை, அவருடைய தொலைபேசி எண் அனைத்தும் இதிலே இணைக்கப்படும். ஒரு ஐடென்டி கார்டு (ID Card) நீங்கள் வைத்திருப்பதைப் போல, ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10, 12 ஆம் வகுப்பிலே படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பட்டா, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை அனைத்தும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளும் வகையில், அதன் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும். அனைத்து திட்டங்களையும் இணையம் மூலம் கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி பெயர் இடம்பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Minister Sengottaiyan’s announcement that measures are being taken to issue identity cards displaying caste details to government school students has sparked a controversy. He stated that, these ID cards—containing details such as name, address, caste, blood group, and Aadhaar number—will be issued to students in classes 10 and 12.