கெளுத்தி மீனுக்கு கேன்சர்.. தோலில் கருப்பு கட்டி.. விஞ்ஞானிகளை மிரளவிட்ட நோய்! மனிதர்களுக்கு பரவுமா?

  • சென்னை: கெளுத்தி மீன்களுக்கு இடையே ஒரு மீனிடமிருந்து இன்னொரு மீனுக்கு புற்றுநோய் நேரடியாகப் பரவுவதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். நீர்நிலைகளில் கலக்கும் நச்சுப் பொருட்களும் சுற்றுச்சூழல் மாற்றங்களுமே மீன்களுக்குள் இந்த நோய் தொற்றாக உருவெடுக்க முக்கியக் காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது. இந்த புற்றுநோய் மனிதர்களுக்கு பரவுமா? இதை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தின் பல்வேறு கண்மாய், ஊருணிகள், சிறு குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளிலும், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் இந்த மீன்களை சாப்பிட்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் 2013ல் மத்திய, மாநில அரசுகள் இதனை சாப்பிட தடை விதித்துள்ளது.

    Advertisement

    கெளுத்தி மீன்கள்

    அதுமட்டுமல்ல, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் நீர் நிலைகளிலுள்ள மற்ற நன்மை தரும் அனைத்து மீன்களையும் சாப்பிட்டே அழித்து விடுகின்றன.. குறைந்த அளவு நீர், சேறும் சகதியுமான இடங்களில் கூட குறைந்த அளவு ஆக்சிஜன் கிடைத்தால் கூட இவை உயிர் வாழும்... இந்த மீன்கள் நீரில் உள்ள பாசி, தாவரங்களை கூட உண்ணும். சாப்பிட எதுவுமே கிடைக்காவிட்டால், தன்னுடைய இனத்தையே சாப்பிட்டுவிடுமாம்.

    விழிப்புணர்வு தேவை

    இவை ஒரு சீசனுக்கு 4 லட்சம் முட்டைகள் இடக்கூடியவை,. ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் அதிகளவில் உள்ளதால், இவைகளை சமைத்து சாப்பிடும்போது, ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றன.

    Advertisement

    ஆனால் விலை குறைவு என்பதால் ஆபத்தை உணராமல் இந்த மீன்களை ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதனால் நீர் நிலைகளில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தபடியே உள்ளது.

    அமெரிக்க ஏரிகளில் அதிர்ச்சி

    இப்படிப்பட்ட சூழலில், கெளுத்தி மீன்களுக்கு இடையே, விசித்திரமான தோல் புற்றுநோய் வேகமாக பரவுவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் வாழும் காட்டு கெளுத்தி மீன்கள் குறித்து விஞ்ஞானிகள் இப்போது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை, உலகளவில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அமெரிக்க ஏரிகளில் வாழும் கெளுத்தி மீன்களிடையே, ஒரு மீனிடமிருந்து இன்னொரு மீனுக்கு பரவக்கூடிய தோல் புற்றுநோய் பரவி வருவதாக புகழ்பெற்ற Nature Ecology & Evolution அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது..

    ஒரு மீனிலிருந்து இன்னொரு மீனுக்கு

    பொதுவாகப் புற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உடலுக்குள்ளேயே உருவாகி வளரக்கூடியது.. இன்னொரு உயிரிக்கு நேரடியாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது. ஆனால், இந்த கெளுத்தி மீன்களில் ஏற்படும் புற்றுநோய் செல்கள், ஒரு ஒட்டுண்ணியைப் போல ஒரு மீனின் உடலில் இருந்து பிரிந்து சென்று இன்னொரு மீனின் உடலுக்குப் பரவி வளரக்கூடியதாம்.

    Advertisement

    விலங்கினங்களில் இப்படித் "தொற்றும் புற்றுநோய்" கண்டறியப்படுவது இது 4வது முறையாகும்.. இதற்கு முன்பு நாய்கள், டாஸ்மேனியன் டெவில்ஸ் மற்றும் சில வகை சிப்பிகளில் மட்டுமே இத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நன்னீர் மீன்களில் இதுவே முதல்முறையாகும்.

    புற்றுநோய் உருமாற்றம்

    அமெரிக்காவின் வெர்மான்ட் மற்றும் கனடாவின் கியூபெக் எல்லைப் பகுதியில் உள்ள மெம்ஃப்ரெமேகாக் ஏரியில் வாழும் "ப்ரௌன் புல்ஹெட்" வகை கெளுத்தி மீன்களிலேயே இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டிலிருந்தே, அந்த ஏரியில் மீன்பிடிப்பவர்கள் கெளுத்தி மீன்களின் தோலில் கருப்பு நிறக் கட்டிகள் மற்றும் புள்ளிகள் இருப்பதை கவனித்து அதிகாரிகளுக்கு தகவல் தந்துள்ளார்கள்.

    Advertisement

    அதற்கு பிறகுதான் இந்த ஆய்வு ஆரம்பமானது.. இதற்காக பலநூறு மீன்களின் மாதிரிகளை சேகரித்து, மரபணு ஆய்வு செய்யப்பட்டது.. இறுதியில் "மாலிகினன்ட் மெலனோமா" (Malignant Melanoma) எனப்படும் வீரியம் மிக்க தோல் புற்றுநோய் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

    அந்த ஏரியில் ஆய்வு செய்யப்பட்ட கெளுத்தி மீன்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. வெர்மான்ட் மட்டுமின்றி நியூ ஹாம்ப்ஷயர், மெய்ன் மற்றும் நியூ பிரன்சுவிக் போன்ற இடங்களிலுள்ள ஏரி, குளங்களிலும் இந்தப் பாதிப்பு பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மீன்கள் இனப்பெருக்கம்

    மீன்கள் இனப்பெருக்கக் காலத்தில் ஆழமற்ற நீரில் கூட்டமாக ஒன்றுசேரும்போது ஏற்படும் உடல் தொடர்பு மூலமாகவோ அல்லது ஏரியின் அடியில் உள்ள வண்டல் மண்ணில் மிதக்கும் புற்றுநோய் செல்கள் மூலமாகவோ இது பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, அப்பகுதியில் இயற்கையாக காணப்படும் "ஆர்சனிக்" வேதிப்பொருளுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    இருந்தாலும் இவையெல்லாம் ஆரம்ப கால கண்டுபிடிப்பு மட்டுமே.. நோய் துல்லியமாக எந்த வழியில் பரவுகிறது என்றெல்லாம் இனிமேல்தான் உறுதி செய்யப்படும்.. இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மீன்கள் உடம்பில் கட்டிகள் இருந்தாலும் உடனடியாக இறந்துவிடாமல், பல வருடங்கள் உயிர் வாழ்கிறதாம்.. எனினும், இது நீண்ட காலத்தில் மீன்களின் மொத்த எண்ணிக்கையை எப்படிப் பாதிக்கும் என தெரியவிலலை.

    மனிதர்களுக்கு பரவுமா?

    இந்த ஆய்வு செய்தி வெளியானதுமே, இத்தகைய மீன்களை உண்பதால் மனிதர்களுக்கும் புற்றுநோய் பரவுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டது.. ஆனால், இந்த புற்றுநோய் செல்கள் கெளுத்தி மீன்களின் உடலமைப்பிற்கு மட்டுமே ஏற்றவாறு பரிணாமம் அடைந்துள்ளதால், மனித உடலுக்குப் பரவ முடியாது என்றும், இதனால் மனிதர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள்..

    மனிதர்களுக்கு நேரடி ஆபத்து எதுவும் இல்லையென்றாலும், இயற்கை சூழலில் விலங்கினங்களுக்கு இடையே இப்படியான புற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதை பற்றி மேலும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்...!!

    English Summary

    Catfish Found With a Strange Contagious Cancer and Black Skin Tumours! Is It Dangerous to Humans? Shocking US Study Explains