“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம்

  • சென்னை: மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியிருந்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில் காவிரி அரசியல் ஆயுதம் அல்ல என சிவகுமாருக்கு தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் நமக்கும் கர்நாடகாவுக்கும் தொடர்ந்து பஞ்சாயத்து நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் நமக்கு கிடைக்கும் கொஞ்சம் நஞ்சம் காவிரி நீருக்கும் ஆப்பு வைக்கும் விதமாக கர்நாடக காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் புதிய அணையை கட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்கு கட்சி பேதமின்றி மொத்த தமிழ்நாடும் எதிர்ப்பு தெரிவிக்க, கர்நாடக அரசு இறங்கி வருவதாக தெரியவில்லை.

    Advertisement

    இன்று இந்த விவகாரம் குறித்து பேசிய டி.கே.சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கப்போவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அடாவடி குரலில் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில்,

    "கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க அறிக்கையை விரைவுபடுத்தி மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற முயற்சிப்பது, தமிழ்நாட்டின் நீர் வழங்கல் உரிமைகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான தாக்குதலாகும்.

    உச்சநீதிமன்றமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளன, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இருந்தபோதிலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிட்டு, சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருகிறார்.

    Advertisement

    மத்திய அரசு இந்த முன்மொழிவை உடனடியாக நிராகரிக்க வேண்டும். கர்நாடகத்தின் பாஜக அழுத்தம் தமிழ்நாட்டுக்கு எதிரான பாகுபாடாக மாறக்கூடாது.
    தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகள் அரசியல் வசதிக்காக பலிகொடுக்கப்பட முடியாது. காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல. அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும்" என பதிவிட்டிருக்கிறார்.

    English Summary

    Cauvery: Strong opposition has arisen following Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar's announcement that he intends to submit a new, comprehensive plan to the Central Government for the construction of a dam at Mekedatu. In light of this, Tamil Nadu Congress MP Manickam Tagore has condemned Shivakumar, asserting that the Cauvery is not a political weapon.