பாலைவனமாக மாறும் ஆபத்து! காவிரி விவகாரம்.. அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்! திருமாவளவன்

  • சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே தமிழக அரசு கூட்டம் வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து தமிழர் விரோத போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், கர்நாடக அரசின் பிடிவாத போக்கினால் தமிழக டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் நியாயமான குரலை உரைத்து வெளிப்படுத்த வேண்டும் என்று திருமவாளவன் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. காவிரியில் நீர் திறந்துவிடப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதுவும் சொல்லாமல் அமைதி காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. விசிக தலைவர் தொல் திருமாவளவனும் உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து

    காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

    10% மட்டுமே

    "தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்து விட்டுள்ள நீர் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு டி.எம்.சி. அடி (tmcft) அளவைக்கூட எட்டவில்லை" என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) தலைவர் வினீத் குப்தா கூறியுள்ளார். "2018-இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் கிடைக்கப்பெற வேண்டிய அளவு 27.2 டி.எம்.சி. அடியாக இருந்த நிலையில், ஜூலை 27 வரையிலான நிலவரப்படி அங்கு 0.6 டி.எம்.சி. அடி மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது.

    Advertisement

    ஜூன் முதல் நாள் முதல் நீர் வரத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பற்றாக்குறை சுமார் 33 டி.எம்.சி. அடியாகும். நிர்ணயிக்கப்பட்ட அளவான 36.4 டி.எம்.சி. அடியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 01 முதல் ஜூலை 27 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீரின் அளவு சுமார் 3.6 டி.எம்.சி. அடி மட்டுமே. அதாவது 10% மட்டுமே" என அவர் தெரிவித்துள்ளார்.

    அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்

    இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் போராடுகின்றனர். குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது. சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக் குறியாகி உள்ளது.

    Advertisement

    இனியும் கர்நாடகா அரசு நமக்கு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை. எனவே, தமிழ்நாட்டின் சார்பில் நாம் நமது நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும்.
    இந்நிலையில் தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    VCK leader Thirumavalavan has stated that the Karnataka government must abandon its anti-Tamil stance of refusing to release water from the Cauvery, and that the Tamil Nadu government should immediately convene an all-party meeting.