காவிரி நீர்! தமிழகத்திற்கு இதுவரை எத்தனை டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டது தெரியுமா? அநியாயம்

  • சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு எத்தனை டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டது, கர்நாடகா இதுவரை எத்தனை டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது என்பது குறித்து தகவல்களை பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகம், கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சினை குறித்து நடுநிலையுடன் செயல்பட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    Advertisement

    இந்த ஆணையம்தான் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் மட்டத்தை ஆய்வு செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும். அதாவது ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்பதுதான் விதி.

    மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகவோ 2.19 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டது.

    அது போல் ஜூலை மாதம் 31.2 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். அதிலும் 19ஆம் தேதி வரை 19.4 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 0.52 டிஎம்சி மட்டுமே தமிழக எல்லைக்கு வந்தது. கர்நாடகா தண்ணீர் திறக்காதது குறித்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழக அரசு புகார் தெரிவித்ததை அடுத்து, ஜூலை 29ஆம் தேதி முதல் தினமும் 1 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட்டது.

    Advertisement

    ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வர வேண்டிய நீரின் அளவு 88 டிஎம்சியில் 12 டிஎம்சி மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை 53.7 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வெறும் 6.75 டிஎம்சி நீரை மட்டுமே வழங்கி அட்டூழியம் செய்து வருகிறது.

    இதுவரை கர்நாடகா வழங்க வேண்டிய நீர் 43.3 டிஎம்சியாகும். இதை இதுவரை வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்கான ஏற்பாடுகளை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    Advertisement

    எஞ்சிய நீரை திறந்துவிடுமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதமும் 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த தண்ணீர் கூட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளின் பாதுகாப்பு கருதி திறந்துவிட்ட நீராகும். அதாவது இவை நமது உரிமை நீரல்ல, உபரி நீர். காவிரியில் நீர் இல்லை நீர் இல்லை என முதல்வர் டி.கே.சிவக்குமார் பஞ்சபாட்டு பாடிய அடுத்த ஓரிரு நாட்களிலேயே தமிழகத்திற்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.

    Advertisement

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அட்டவணையின்படி ஜூன் முதல் மே மாதம் வரை மாதாமாதம் கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரின் அளவு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

    ஜூன்- 9.19 டிஎம்சி
    ஜூலை- 31.24 டிஎம்சி
    ஆகஸ்ட் - 45.95 டிஎம்சி
    செப்டம்பர்- 36.76 டிஎம்சி
    அக்டோபர்- 20.22 டிஎம்சி
    நவம்பர் - 13.78 டிஎம்சி
    டிசம்பர் - 7.35 டிஎம்சி
    ஜனவரி- 2.76 டிஎம்சி
    பிப்ரவரி- 2.50 டிஎம்சி
    மார்ச் - 2.50 டிஎம்சி
    மே - 2.50 டிஎம்சி

    ஆக மொத்தம் 177.25 டிஎம்சி நீர். இந்த அட்டவணையை பின்பற்றியே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு முறையும் நீரை திறந்து விட உத்தரவிட்டு வருகிறது. தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் நவம்பர் வரை மொத்த நீரின் அளவில் 88 சதவீதம் அதாவது 157 டிஎம்சியை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு முறை கூட தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்கியதே இல்லை.

    English Summary

    Do you know how much Cauvery water has CWMA ordered to Karnataka and how many TMC of water has the state released so far?