தமிழகத்தை வந்தடைந்தது காவிரி நீர்.. ஒகேனக்கல்லில் 1000 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து

  • சென்னை: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது. கர்நாடக அணை நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்தானது படிப்படியாக உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கபினி அணையில் இருந்து காவிரிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு தமிழகம் வந்தடைந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி ஆண்டுதோறும் பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கர்நாடகத்தில் பருவ மழையின்மை காரணமாக அணைகள் வறண்டு காணப்பட்டன. மேட்டூர் அணையில் 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போனதால், நடப்பு ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழகம் கேட்ட நிலையில், கர்நாடகம் மறுத்துவிட்டது. காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    Advertisement

    இந்நிலையில், தற்போது கேரள மாநிலம் வயநாடு, கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

    கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் இன்று காலை தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்துள்ளது. நேற்று நிலவரப்படி 500 கன அடியாக இருந்து வந்த தண்ணீர் வரத்தானது கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இன்று காலை ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    கேரளம், வயநாடு, கர்நாடகம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பைக் கருதி 1 ஆம் தேதி முதல் 10 ஆயிரம், 20 ஆயிரம், 25 ஆயிரம், 27 ஆயிரம் என்ற விகிதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக கர்நாடக எல்லைக்கு விநாடிக்கு 1000 கன அடியாக தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    இதனால், ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கட்டியது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆறு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Major dams in Karnataka are filling up rapidly due to heavy rainfall in the Cauvery catchment areas. Meanwhile, Cauvery water released from the Karnataka dams has reached Tamil Nadu. Due to the inflow from the Karnataka dams, the water flow in the Cauvery River at Hogenakkal has increased to 1,000 cubic feet per second. Officials have stated that the inflow will be increased gradually.