CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியாக தொடங்கின!


  • சென்னை: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மதிப்பெண்களில் சந்தேகம் இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுதல், சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தற்போது கட்டம் கட்டமாக வெளியிட்டு வருகிறது.

    Advertisement

    சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தற்போதைய தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிடத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்களது தற்போதைய தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ டிஜிலாக்கர் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக 'திரையில் மதிப்பிடுதல்' (OSM) முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த புதிய முறையால் பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும், சில விடைகள் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களைப் பெற்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் மதிப்பெண்களில் திருத்தம் தேவை என கருதிய மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். தகவலின்படி, 4 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் மூலம் 11.3 லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள் நகல்கள் கோரப்பட்டிருந்தன. அவற்றில் சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் 3.8 லட்சம் விடைத்தாள்களை மறுமதிப்பீட்டுக்காக சமர்ப்பித்திருந்தனர்.

    Advertisement

    இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு வருவதாகவும், பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 87 சதவீதத்திற்கு மேலான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

    விடுபட்ட மீதமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களும் மிக விரைவில் பரிசீலிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் அடுத்தடுத்த கட்டங்களில் வெளியிடப்படும் என்றும், ஒட்டுமொத்த செயல்முறையும் விரைவில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தற்போதைய தேர்வு முடிவின் நிலையை அதிகாரப்பூர்வ http://results.digilocker.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    Advertisement

    மறுமதிப்பீடு செயல்பாட்டில் நியாயத்தன்மை மற்றும் துல்லியத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாணவரின் கோரிக்கையும் மிகவும் வெளிப்படையான மற்றும் கவனமாக கண்காணிக்கப்படும் ஒரு நடைமுறையின் மூலமே பரிசீலிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது.

    மறுமதிப்பீடு செயல்பாடு குறித்து பரவும் வதந்திகள் அல்லது சமூக வலைதளங்களில் வரும் சரிபார்க்கப்படாத பதிவுகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், நம்பகமான தகவல்களுக்கு சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே சார்ந்திருக்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்படின், சிபிஎஸ்இ அலுவலகங்கள் மற்றும் உதவி மையங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    CBSE has started releasing Class 12 revaluation and rechecking results for students who applied for answer sheet verification. Check your updated marks and result status online through DigiLocker.