சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முக்கிய கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதித்து இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்து அறநிலைய துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.
பக்தர்களின் செல்போனை கோயில்களில் பாதுகாக்க கட்டணமாக ரூ 5 கட்டணம் வசூலிக்கப்படும். கோயிலுக்குள் பக்தர்கள் புகைப்படம், வீடியோ எடுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அது போல் கோயில்களில் தெய்வ சிலைகள், கருவறையை புகைப்படம் எடுப்பது வீடியோ எடுப்பது கூடாது. ரீல்ஸ் போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் விஐபிக்கள், நடிகர், நடிகைகளுடன் சென்று கோயிலுக்குள் ஊடகங்கள் வீடியோ, புகைப்படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பக்தர்கள் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாதபடி கோயிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குப்படுத்த வேண்டும். கோயில்களுக்கு முக்கிய பிரமுகர்கள் வருகை குறித்து ஒரு நாள் முன்னதாகவே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். விஐபிக்கள் வருகையின் போது கோயிலின் புனிதத்தன்மை, மரபு சார்ந்த விஷயங்கள் பாதிக்கக் கூடாது. இவ்வாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.