தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி.. இன்று முதல் தொடக்கம்

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகள் மேற்பார்வையில் 1.15 லட்சம் பேர் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளது. தவறான தகவலை மக்கள் அளித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியான இன்று தொடங்கி வருகிற 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.

    Advertisement

    அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இதில், வீடுகளின் எண்ணிக்கை, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிவாயு பயன்பாடு, மின்வசதி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 33 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும்.

    இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    Advertisement

    சுய கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களும் களப்பணியின்போது கணக்கெடுக்கப்படுவார்கள். வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Census operations are set to take place across Tamil Nadu from today until the 30th of this month.