செங்கல்பட்டு டூ கிளாம்பாக்கம்.. அரசு பஸ் டிரைவர்கள் ஒரு சிலரின் தவறால் பெரிய சிக்கல் வரலாம்

  • சென்னை: செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கி வரும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சிலர், சிக்னல் போடப்பட்டிருந்தாலும் அதனை மதிப்பதே இல்லை. சாலையின் மற்றொரு பகுதியிலிருந்து பிற வாகனங்கள் வரும் என்ற எண்ணமும் அவர்களுக்குத் துளியும் இல்லை. சிக்னல் விழுந்திருந்தாலும் அதனைத் துச்சமாக மதித்துக் கடந்து செல்கின்றனர். சிக்னலை மதிக்காமல் செல்லும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் வெளியூர்ச் செல்லும் பேருந்துகளாகவும், கிளாம்பாக்கம் வரை இயங்கும் பேருந்துகளாகவும் உள்ளன. சிக்னலை மதிக்காமல் கிளாம்பாக்கம் செல்வது மட்டுமன்றி, கிளாம்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும்போதும் இதே போக்கு அதிகமாகி வருகிறது என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    Advertisement

    சென்னையில் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி ஆகிய பிரதான சிக்னல்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். பரனூர் முதல் கிளாம்பாக்கம் வரை உள்ள இந்தச் சாலையில் மட்டும் 14 சிக்னல்களைக் கடந்து செல்ல வேண்டும். இதில் கூடுவாஞ்சேரியிலும், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். வர்த்தக மையங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால், சிக்னலை மீறிச் செல்வது பேருந்து ஓட்டுநர்களுக்கும் சரி, பிற வாகன ஓட்டிகளுக்கும் சரி மிகவும் கடினம்.

    Advertisement

    ஆனால் தைலாவரம், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்ல முடியும். இருப்பினும் சிக்னல்களைப் பார்த்தால் நின்றுதான் செல்ல வேண்டும். ஆனால், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் சிக்னலை மதிக்காமல் செல்வது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாகக் காட்டாங்குளத்தூர் சிக்னல் மற்றும் மறைமலைநகரில் உள்ள இரண்டு சிக்னல்களிலும், அரசுப் பேருந்துகள் சரியாக நிற்காமல் வேகமாகச் செல்ல முயற்சிக்கின்றன. சிக்னல் போடப்பட்ட பின்னரும் அதனை மீறிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் சிக்னல் விழுந்துவிட்டது என்ற நம்பிக்கையில் சாலையைக் கடக்கும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது.

    Advertisement

    கார் ஓட்டுநர்களும் லாரி ஓட்டுநர்களும் சிக்னலை மதிக்காமல் வேகமாகப் போவது ஒருபுறமிருக்க, அவர்களைவிடவும் சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சிக்னலை மதிக்காமல் செல்கின்றனர். சிக்னல் போடப்பட்டுவிட்டது என்று நம்பிக்கையுடன் சாலையைக் கடக்க முயலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் அடிக்கடி நடக்கிறது. இங்குப் பல விபத்துகள் நடந்துள்ளன. ஆனால் அந்த விபத்துகளில் பல, எந்த ஊடகங்களிலும் வெளியாவதே இல்லை. அண்மையில் சிக்னல் போடப்பட்ட பிறகு, ஆம்புலன்ஸ் ஒன்று காட்டாங்குளத்தூர் சிக்னலைக் கடந்தது.

    அப்போது நடந்த விபத்தில் வாகன ஓட்டி ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் சில கார் ஓட்டுநர்களாலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்களாலும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது. "காவல்துறையினர் இந்தச் சிக்னல்களில் விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம் உறுதி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே விபத்து அபாயம் குறையும்" என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மேலும் மறைமலைநகரிலும் காட்டாங்குளத்தூரிலும் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    English Summary

    The government buses that frequently disregard traffic signals are mostly long-distance services or those terminating at Kilambakkam. Residents of the Kattankulathur area allege that there is a rising trend of government buses ignoring signals while traveling from Kilambakkam towards Chengalpattu.