எடப்பாடிக்கு ஷாக்.. தலைநகர் அதிமுகவில் பின்னடைவு.. வடசென்னை மாவட்ட செயலாளரை தட்டித் தூக்கிய தவெக!

  • சென்னை: வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இன்று தவெகவில் இணைந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார்.

    Advertisement

    அதிமுகவில் சென்னையின் முக்கிய முகமாக இருந்த வட சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ராஜேஷ் தவெகவில் இணைந்துள்ளது அதிமுகவுக்கு தலைநகரில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலின் போக்கையே மாற்றியமைத்துள்ளன. தேர்தல் முடிவுகளில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவிற்குள், உட்கட்சிப் பூசல் வெடித்தது. அதிமுகவின் 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு அடுத்த நிமிடமே தவெகவில் இணைந்தனர். மேலும் அதிமுகவின் தூண்களாக பார்க்கப்பட்ட பல நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், சிவபதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக மூத்த நிர்வாகியும் எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இந்நிலையில் அதிமுக தலைமைக்கு, தற்போது அடுத்த பேரிடி விழுந்துள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையின் முக்கியத் தூணாக விளங்கும் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இன்று தவெகவில் இணைந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார்.

    தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், "இந்த நாள் இனிய நாள். நம்முடைய தலைவர் விஜய் தலைமையை ஏற்று, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்தை சந்தித்து கழகத்தில் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்.

    மக்களுக்கான அரசு, மக்களை நாடி ஒரு அரசு என்ற விஷயத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்பை வரவேற்கும் விதமாகவும், எதிர்பார்க்கும் விதமாகவும் இன்று மகிழ்ச்சியான, நிறைவான மனநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறோம். நம்முடைய எம்ஜிஆர், அம்மா வழியில் நம்முடைய முதலமைச்சர் பணியாற்றும் விதம் அமைந்திருப்பதால், அனைத்து உறவுகளும் சந்தோஷப்படும் வகையில் கண்டிப்பாக வரும் காலம் நன்றாக இருக்கும்.

    Advertisement

    அதன் அடிப்படையில் இன்று நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறோம். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரைப் பார்த்து கழகத்தில் இணைந்திருக்கிறோம்.

    தலைமையை விமர்சிக்க வேண்டுமென்றோ, குற்றச்சாட்டு சொல்ல வேண்டுமென்றோ இல்லை. நல்லதொரு தலைவர் என்பதற்கு வரும் தலைமுறையை வளர வைத்து அழகு பார்ப்பதுதான் நல்ல பண்பு. மாவட்ட செயலாளர் என்பது மிகப்பெரிய அங்கீகாரம். எங்களை கேட்காமல் பல நிர்வாகிகளை நியமிப்பதல் சரிவர பணி செய்ய முடியாது. அது தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும்.

    நல்ல விஷயத்திற்காக இணைந்திருக்கிறோம். கடந்த காலம் கடந்து போகட்டும். ஆர்கே நகர் அம்மாவின் தொகுதி. எங்களின் பணி என்னவென்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஒரு மாற்றம் தேவை என்பதற்காக மக்கள் அடையாளம் செய்து கொடுத்தார்கள். அந்த மாற்றம் நல்ல மாற்றமாக, லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாக அமையவேண்டி மக்கள் இந்த அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நல்ல அடையாளம் கிடைக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    North Chennai AIADMK District Secretary RS Rajesh joined the TVK today. He stated that he joined the party at the Chennai Secretariat in the presence of Minister and TVK General Secretary Bussy Anand.