சென்னை விமான நிலையத்தில் என்ன பண்றீங்க.. டெல்லியில் சீரியஸாக நடந்த மீட்டிங்.. அதிரடி முடிவு

  • சென்னை: சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 3 முனையத் திட்டத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால காலக்கெடு மீண்டும் ஏப்ரல் 2027-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும் அப்போதும் முடிவடைய வாய்ப்பு குறைவு என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் T3 சர்வதேச முனையத்தின் பணிகள் குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரிகள் அண்மையில் விரிவான ஆய்வு நடத்தினர். T3 சர்வதேச முனைய கட்டடத்தை ஏப்ரல் 2027-க்குள் முடிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தை இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த முனையத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வதும், விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதும் இந்த விரிவான ஆய்வின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாக T3 முனையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காலக்கெடு சமீபத்தில் மீண்டும் டிசம்பர் 2026-லிருந்து ஏப்ரல் 2027-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த முனையத்தில் இதுவரை சுமார் 75 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருக்கிறது. மொத்தம் 86,135 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த முனையம், சென்னை விமான நிலையத்தின் ஆண்டுப் பயணிகளைக் கையாளும் திறனை 3.5 கோடியாக அதிகரிக்கும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . எனினும் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் டெர்மினல் 3பணிகள் முடிய வாய்ப்பு இல்லை என்றே சில நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

    Advertisement

    ஆனால் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா, டெர்மினல் 3 முனையத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதில் இனியும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காலக்கெடுவுக்குள் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் தனியார் விமான நிலையங்களுக்கு இணையான செயல்திறனுடன் சென்னை விமான நிலையமும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    விஜய் எழுதிய ரகசிய கடிதம்.. சென்னை விமான நிலையத்தை 'பிபிபி' முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு?

    டெல்லியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகளை மேம்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த சில வாரங்களில் விமான நிலையத்தில் ஏராளமான வழிகாட்டிப் பலகைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் வழிகாட்டிப் பலகைகளை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா மீண்டும் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தின் தொலைதூர விமான நிறுத்துமிடங்களுக்கு அருகே T5 முனையத்தைக் கட்டுவது தொடர்பாகத் தமிழக அரசு முன்வைத்துள்ள திட்டம் குறித்தும், இதுதொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் சின்ஹா மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை விமான நிலையம் வழியாகப் பயணம் செய்த பிரதமர் அலுவலகத்தின் செயலாளர்களில் ஒருவருக்கும், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வரவிருக்கும் புதிய முன்மொழிவுகள் குறித்து விமான நிலைய ஆணையம் விளக்கமளித்துள்ளது.

    English Summary

    Senior officials from the Union Ministry of Civil Aviation and the Airports Authority of India inspected the Terminal 3 project at Chennai Airport. However, the deadline has once again been pushed back to April 2027. Furthermore, concerns have been raised that it is unlikely to be completed even by that date.