ஏர்போர்ட்டில் பீரியட்ஸ்.. Pad இல்லாமல் தவித்த பிரபல நடிகை! ஒரே வீடியோவால் நிகழ்ந்த மாற்றம்.. சபாஷ்!

  • சென்னை: பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையை கருத்தில் கொண்டு, சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு நடிகை லதா ராவ் வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராதவிதமாக மாதவிடாய் ஏற்பட்டதாகவும், அவசரத்தில் சானிட்டரி நாப்கின் எடுத்து வரவில்லை என சொல்லப்படுகிறது.

    Advertisement

    விமான நிலைய கழிவறைகளில் நாப்கின் பெறுவதற்காக பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்களும் செயல்படவில்லையாம். இதனால், நாப்கின் வாங்குவதற்காக மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக விமானத்தை தவறவிடும் சூழல் உருவானதாக தெரிவித்திருந்தார்.

    விமான நிலையம் போன்ற முக்கியமான பொது இடங்களில் பெண்களின் அவசர சுகாதாரத் தேவைகளுக்கான வசதிகள் முறையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய லதா ராவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற சென்னை விமான நிலையத்தில் பெண்களுக்கான அடிப்படை வசதி கிடைக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். பெண் பயணிகளுக்கு மாதவிடாய் நேரத்தில் உடனடியாக நாப்கின் கிடைக்கும் வகையில் நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

    Advertisement

    இந்த விவகாரம் பரவலாக சமுக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. அதாவது சென்னை விமான நிலையத்தில் பெண்கள் கழிவறைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவற்றில் சிலவற்றை பயணிகள் மற்றும் சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த இயந்திரங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாகவும், இயந்திரங்கள் இல்லாததால் பெண் பயணிகளுக்கு அவசர நேரத்தில் சானிட்டரி நாப்கின் கிடைக்காமல் போகக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக அவசர உதவி எண்கள் ஒட்டப்பட்டிருக்கும், அவசரமாக நாப்கின் தேவைப்படும் பெண்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டால், சுமார் 2 நிமிடங்களுக்குள் பெண் ஊழியர் மூலம் நாப்கின் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    இந்த தற்காலிக ஏற்பாடு இருந்தபோதிலும், விமான நிலையத்தில் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்தது. இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சென்னை விமான நிலையத்தில் புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் மொத்தம் 36 புதிய நவீன சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் பெண் பயணிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய இயந்திரங்களை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு பெண் பயணிகளின் பயன்பாட்டுக்கு அவை கொண்டு வரப்பட உள்ளன.

    Advertisement

    புதிய 36 இயந்திரங்களும் முழுமையாக நிறுவப்பட்டு, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பெண் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், விமான நிலையத்தில் திடீரென மாதவிடாய் ஏற்படும் பெண்கள், முன்கூட்டியே நாப்கின் கொண்டு வராத சூழலிலும் உடனடியாக தேவையான நாப்கின்களை பெற்றுக்கொள்ள முடியும்.

    ஒரு நடிகை தனது பிரச்சினை என்று மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த பெண்களுக்காக குரல் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி, தற்போது நிரந்தர நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளதால் அவருக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

    English Summary

    Chennai Airport will install 36 sanitary napkin vending machines after actress Latha Rao highlighted menstrual hygiene concerns through a social media video.