சென்னை: சென்னை அண்ணா நகரில் தாயும், பல் மருத்துவரான மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 1 கோடி சொத்துக்காக தாய் மற்றும் தம்பியை கொலை செய்த மூத்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர் கிழக்கு, முதல் அவென்யூ பகுதியில் வசித்து வந்தவர் அஷ்ரப் நிஷா (வயது 69). கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு அப்ரார் அஹமது (வயது 50), அஷ்ரார் அஹமது (வயது 49) மற்றும் அஷ்ரப் அஹமது (வயது 42) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தாய் அஷ்ரப் நிஷாவும், இளைய மகனான பல் மருத்துவர் அஷ்ரப் அஹமதுவும் அவர்களுடைய வீட்டில் இறந்த நிலையில் கிடப்பதாக அண்ணா நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற அண்ணா நகர் போலீசார், தாய் மற்றும் மகன் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, அஷ்ரப் நிஷாவின் முகம் மற்றும் உடலில் பல்வேறு காயங்களும், டாக்டர் அஷ்ரப் அஹமதுவின் இடுப்பு, கைகள் மற்றும் கால்களில் காயங்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். தாய், மகன் இருவரின் இறப்பிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அண்ணா நகர் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள குடும்பச் சொத்தை விற்பனை செய்து அதனை பங்கீடு செய்வது தொடர்பாக குடும்பத்தில் நீண்ட நாட்களாக தகராறு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூத்த மகனான அஷ்ரார் அஹமது மற்றும் இரண்டாவது மகனான அப்ரார் அஹமதுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டி, தாயார் அஷ்ரப் நிஷா மற்றும் தங்களது தம்பி அஷ்ரப் அஹமது ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். தாய், தம்பியை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுவிட்டு அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரும் நாடகம் ஆடியுள்ளனர். இன்று காலையில் இருவரும் உயிர் இழந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவிய நிலையில் தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களது மனைவி, பிள்ளைகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள போலீசார், அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணா நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.